இலங்கை இலஙகை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தற்போது விற்பனை செய்யும் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலுக்கு 129 ரூபாயும், ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலுக்கு 60 ரூபாயும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக சிபிசி தலைவர் டி.ஜே. ராஜகருணா, சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு குறித்து விளக்கும் போது தெரிவித்துள்ளார்.
ராஜகருணாவின் கூற்றுப்படி, ஒரு லீற்றர் ஓட்டோ டீசலை வழங்குவதற்கான உண்மையான செலவு சுமார் 536 ரூபாயாக உள்ள போதிலும், அது 407 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு லீற்றருக்கு 129 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இதேபோல், ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலை வழங்குவதற்கு தோராயமாக 494 ரூபாய் செலவாகிறது, ஆனால் அது 434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் லீற்றருக்கு 60 ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அவர் கூறினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், கடந்த சில மாதங்களாக இந்த நட்டத்தின் பெரும்பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாக சிபிசி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையிடல் ஆதரவிற்காக அரசாங்கம் 57 பில்லியன் ரூபாயை ஒதுக்கியிருந்த போதிலும், இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஜூன் மாத இறுதிக்குள் முற்றாகத் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவு உயர்வு ஆகியவையே எரிபொருள் விலை திருத்தத்தின் தேவைக்குக் காரணங்களாக அமைந்ததாக ராஜகருணா தெரிவித்தார். அதிகளவிலான மானிய விலையில் எரிபொருளைத் தொடர்ந்து விற்பனை செய்வது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு (Foreign exchange reserves) மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதிகப்படியான எரிபொருள் பயன்பாடு ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தத்தை மோசமாக்கி, பரந்த பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் தங்களால் இயன்றவரை எரிபொருள் நுகர்வைக் குறைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கியூஆர் (QR) குறியீட்டு முறையின் மூலம் எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிப்பதை சிபிசி வலுப்படுத்தும் என்றும், தேவையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் எரிபொருள் நிரப்பு நிலைய நடத்துனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜகருணா மேலும் தெரிவித்தார்.