சவுதிஅரேபியாவில் அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் இந்த அறிவிப்பை ஒரு நிம்மதியான தருணம் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை என குறிப்பிட்டுள்ளதுடன் அவரது விடுதலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அனோஜனின் குடும்பதினருக்கும் அவரது உயிரை காப்பாற்றுவதற்காக போராடியவர்களுக்கும் இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
அவரது தற்போதைய தண்டனை மற்றும் விடுதலைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மேலும் விளக்கங்கள் தேவை.
இது வெறுமனே ஒரு சட்டரீதியான அறிவிப்பு மாத்திரம் அல்ல,பல வார கால அச்சம்,அவரை விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட தளராத முயற்சிகளின் பின்னர் மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.
நான் இந்த விடயத்தில் நெருக்கமாக ஈடுபட்டிருந்தேன் அனோஜனின் குடும்பத்தவர்களுடன் தொடர்புகொள்வது,அவரது சட்டநிலைமை குறித்து கரிசனைகளை வெளியிடுவது,அரசாங்க பிரதிநிதிகள் , சட்டதுறையினர், சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்புகொள்வது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தேன்.
ஆரம்பத்தில் அனோஜனுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையையும் மூன்று மில்லியன் சவுதிரியால் அபராதத்தையும் விதித்தார்கள்,அதன் பின்னரே இதனை மரண தண்டனையாக மாற்றினார்கள்.
சமூக ஊடக கருத்திற்காக மரணதண்டனை விதிப்பது என்பது வாழ்வதற்கான உரிமை, கருத்து சுதந்திரம், போன்றவை குறித்த கரிசனைகளை எழுப்பியிருந்தது.
கருத்து சுதந்திரம் நபர்களுக்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிப்பதில்லை என்ற போதிலும்,ஒருமனிதனின் உயிர் ஆபத்தில் இருக்கும்போது வழங்கப்படும் தண்டனையின் தீவிரதன்மையை பரிசீலிக்கவேண்டும்.
இந்த விவகாரம் அனோஜன் குடும்பதினருக்கு உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,நிச்சயமற்ற தன்மையும் அவரது உயிரை காப்பாற்றுவதற்கான அர்ப்பணிப்பும் இந்த முயற்சிகள் மீதான எனது ஈடுபாட்டை அர்ப்பணிப்பை அதிகரித்துள்ளது.
இந்த அறிவிப்பு அனோஜனின் உயிருக்கு உடனடி ஆபத்தில்லை என்பதை தெரியப்படுத்தியுள்ளது என்றாலும் இத்துடன் இந்த விடயம் முடிவிற்கு வந்துவிட்டது என கருதக்கூடாது.
அனோஜனின் சட்டபூர்வமான தண்டனை அவர் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விளக்கத்திற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.அந்த விபரங்கள் வெளியாகும் வரை அனோஜனின் எதிர்காலம் குறித்த குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற நிலை நீடிக்கின்றது.
வெளிநாடுகளில் சட்டசிக்கல்களை எதிர்கொண்டுள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அதிகாரிகள் உரிய உதவிகளை வழங்கவேண்டும்.
வெளிநாடுகளில் இலங்கை பிரஜைகள் மரணதண்டனை போன்ற கடும் சட்டசிக்கல்களை எதிர்கொள்ளும்போது சரியான நேரத்தில் இராஜதந்திர உதவிகள், சட்ட உதவிகள் போன்றவற்றை வழங்குவது அவசியம்.
மரணதண்டனை இரத்தானது நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம்தான் ஆனால் அனோஜன் விடுதலையாகி பாதுகாப்பாக மீண்டும் குடும்பத்துடன் இணையும் தருணத்தையே உண்மையான வெற்றியாக கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.