அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) திருத்தங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார். ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த பாரிய மாற்றங்கள், வணிக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அவற்றை மூச்சுத்திணறச் செய்யும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
“இலங்கை ஒரே நேரத்தில் VAT வலைப்பின்னலை விரிவுபடுத்துகிறது, வரி விகிதங்களை உயர்த்துகிறது மற்றும் வரி அமுலாக்கத்தை கடுமையாக்குகிறது. இதனால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMEs) பாதிக்கப்படுகின்றன. நிதிச் சேவைகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம் வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் வரி இணக்கப்பாட்டுச் சுமையும் அதிகரித்துள்ளது. இது சீர்திருத்தம் அல்ல; இது பிடுங்கல். ஒரு பொருளாதாரத்தை வரி விதிப்பதன் மூலம் வளர்ச்சி அடையச் செய்ய முடியாது. வணிகங்களால் மூச்சுவிட முடியாவிட்டால், அவர்களால் உயிர்வாழவோ அல்லது செழிக்கவோ முடியாது. வணிகங்களே இல்லையென்றால், எதற்கு வரி விதிப்பீர்கள்?” என அவர் ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்ட VAT திருத்தச் சட்டமூலம், வரிப் பதிவுக்கான வருடாந்த வருமான எல்லையை 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்க முன்மொழிகிறது. இது அதிகளவிலான சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை வரி வலைக்குள் இழுக்கும். மேலும், இலங்கைப் நுகர்வோருக்கு வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு VAT அறிமுகப்படுத்தப்படுவதுடன், நிதிச் சேவைகளுக்கான VAT 18 சதவீதத்திலிருந்து 20.5 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது.
வரி மீறல்களுக்கான அபராதம் 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கவும் இந்த சட்டமூலத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், VAT பதிவு செய்த வணிகங்கள், நிகழ்நேர பரிவர்த்தனை அறிக்கையிடலுக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான விற்பனை முனைய (POS) முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் பற்றிய விபரங்களைப் பகிரங்கப்படுத்துதல், உள்ளீட்டு வரி (Input Tax) விதிகளில் மாற்றங்கள் மற்றும் கொழும்பு துறைமுக நகர கட்டமைப்பின் கீழ் உள்ள மூலோபாய வணிகங்களுக்கு வரி விலக்கு அளித்தல் போன்ற அம்சங்களும் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
