ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் அந்த நீரிணைக்குள் நுழைய முயன்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நீரிணையை நெருங்கும் அல்லது அதற்குள் நுழைய முயற்சிக்கும் “எந்தவொரு வெளிநாட்டு ஆயுதப் படைகளையும்”, குறிப்பாக “ஆக்கிரமிப்பு அமெரிக்க இராணுவத்தை” தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி இது குறித்துக் கூறுகையில், “ஹோர்முஸ் நீரிணையானது ஈரானிய ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் இந்த நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரானுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும்,” எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் அரச ஊடகமான IRIB இந்த அறிக்கையைப் பகிர்ந்துள்ளது.
பின்னணி: அமெரிக்க இராணுவத்தின் கூற்றுப்படி, “ப்ராஜெக்ட் ஃப்ரீடம்” (Project Freedom) என்ற இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக, ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் (Guided-missile destroyers), நிலம் மற்றும் கடல் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் 15,000 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்க ஈரான் தயார்: ஈரான் வெளியுறவு அமைச்சகம்
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குப் “பதிலடி கொடுக்கத் தயாராக” இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ‘மெஹ்ர்’ (Mehr) செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ள அறிக்கையில், வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி (Esmail Baghaie), ஹோர்முஸ் நீரிணையின் “காவலனாகவும் பாதுகாவலனாகவும்” ஈரான் தொடர்ந்தும் செயற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “கப்பல்களும் கப்பல் நிறுவனங்களும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள, ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் தகுதியுள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை நன்கு அறிவார்கள்,” எனத் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும் நாடுகள், அமெரிக்காவின் “சட்டவிரோதச் செயல்களைப்” பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் பகாயி சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் அல்லது அதற்குள் நுழைய முயற்சிக்கும் “எந்தவொரு வெளிநாட்டு ஆயுதப் படைகளையும்”, குறிப்பாக “ஆக்கிரமிப்பு அமெரிக்க இராணுவத்தை” ஈரான் தாக்கும் என்று ஈரானின் மத்திய கட்டளைத் தலைமையகத்தின் தலைவர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
