திறைசேரி நிதி க இணைய வழியில் திருடப்பட்டமை குறித்து அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியதையடுத்து, இன்று (05) நாடாளுமன்றத்தில் ஒரு பதற்றமான சூழல் உருவானது.
எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, இது தொடர்பான எழுத்துப்பூர்வ கோரிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபையில் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தமது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, விவாதத்திற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அவசர விவாதத்தை நடத்த முடியும் என்று விளக்கமளித்தார்.
இதன்போது சபாநாயகருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, விவாதத்தை இன்றே நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக சபையில் அறிவித்தார்.
இதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த அவசர விவாதத்தை நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ரத்நாயக்க அறிவித்தார்.
