-
பயனாளிகளுக்கு இரட்டை மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
-
நடைமுறைகளை மீறி நிதி விநியோகம்.
-
நாடாளுமன்ற விசாரணைக்கு இலவச சட்டத்தரணிகள் அமைப்பு அவசர கோரிக்கை.
-
நிதி அமைச்சு மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ்.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி, பயனாளிகளுக்கு இரட்டை மற்றும் மேலதிக கொடுப்பனவுகளாக முறைக்கேடான முறையில் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள ‘இலவச சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு, இது குறித்து உடனடியாக நாடாளுமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நலன்புரி நன்மைகள் சபையினால் (WBB) முறையான நிதி நடைமுறைகள் அல்லது மேற்பார்வையின்றி இந்தப் பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு நேற்று (6) தெரிவித்துள்ளது.
த டெய்லி மோர்னிங் பத்திரிகையினால் பார்வையிடப்பட்ட அந்த கடிதத்தின்படி, இந்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதத்தில் சுமார் 1.83 மில்லியன் குடும்பங்கள் அஸ்வெசும நன்மைகளைப் பெறவிருந்தன. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட பகுதி பயனாளிகளுக்கு இரண்டு முறை கொடுப்பனவுகள் கிடைத்துள்ளன. மேலும் சிலருக்கு அரசாங்கம் அங்கீகரித்த போனஸ் கொடுப்பனவுகளையும் தாண்டி, அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த நிதி, திறைசேரியினால் விடுவிக்கப்பட்டு, நலன்புரி நன்மைகள் சபையூடாக பயனாளிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சட்டத்தரணி அதுல டி சில்வா மற்றும் முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், நிறுவன நடைமுறைகள், நிதி விதிமுறைகள் அல்லது முறையான சரிபார்ப்புகள் இன்றி இந்த நிதி விநியோகம் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது நிதி மீதான கட்டுப்பாட்டை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டியுள்ள இவ்வமைப்பு, சில முக்கிய வினாக்களுக்கு அவசர பதில்களைக் கோரியுள்ளது:
-
எத்தனை குடும்பங்களுக்கு இரட்டை அல்லது மேலதிக கொடுப்பனவுகள் கிடைத்தன?
-
கேகாலை, மொனராகலை மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களில் பதிவான சம்பவங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதா?
-
மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்ற பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் அதன் முழுமையான பெறுமதி எவ்வளவு?
-
அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக இத்தகைய கொடுப்பனவுகளை வழங்க அனுமதி அளித்த அதிகாரிகள் யார்? அவர்களுக்கு நிதி அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததா?
மேலும், திறைசேரி அதிகாரிகளின் பங்கு குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்றும், இந்தச் சம்பவம் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறா (System failure), மனிதத் தவறா அல்லது சைபர் தாக்குதல் போன்ற வெளிப்படையான இடையூறுகளால் ஏற்பட்டதா என்பது குறித்தும் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் நிர்வாகக் கட்டுப்பாட்டை, தேவையான சுதந்திரத்துடன் செயற்படக்கூடிய அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவரின் கீழ் கொண்டு வருமாறும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதேவேளை, குறைந்த வருமானம் பெறும் பயனாளிகளுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தாத வகையில், மேலதிகமாக வழங்கப்பட்ட பணத்தை தவணை முறையில் மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.