ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை ஈரானிய ஆயுதப் படைகளுக்கும் “எதிரிக்கும்” இடையிலான “பரஸ்பர துப்பாக்கிச் சூடு” என்று அந்த ஊடகம் வர்ணித்துள்ளது.
வியாழக்கிழமை மாலை ஹோர்முஸ் நீரிணையில் பதிவான இந்தத் தாக்குதல்களில் “இஸ்ரேலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று இஸ்ரேலியத் தரப்பு ஒன்று பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஈரானிய அரச ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல் (Tanker) மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக நீரிணையில் இருந்த “எதிரிப் பிரிவுகள்” மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் குறித்து அமெரிக்கா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் “பெரிய முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சிக்கியிருக்கும் கப்பல்களை வழிநடத்தும் நடவடிக்கையை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தியிருந்தது.
புதன்கிழமை கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், ஏற்கனவே ஒப்புக்கொண்டதை வழங்க ஈரான் சம்மதித்தால், “Operation Epic Fury” என அழைக்கப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று கூறினார். இது குறித்த மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை. அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிவு குறித்து பரிசீலித்து வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையில் உரையாற்றுகையில், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே “முழுமையான ஒருங்கிணைப்பு” இருப்பதாகவும், அங்கு ஆச்சரியங்களுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.