முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை (12) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி நாளை காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாவார் எனக் குறிப்பிட்டார். இந்த அழைப்பாணை தொடர்பாக சில சட்ட விடயங்களை விவாதிப்பதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று பிற்பகல் கூடவுள்ளதாகவும் கமகே தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் மறைந்த முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கமகே தெரிவித்தார்.
இருப்பினும், தனது வாக்குமூலம் அச்சுறுத்தல் மற்றும் கட்டாயத்தின் பேரில் பெறப்பட்டதாக கபில சந்திரசேன ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி சமர்ப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கமகே, அத்தகைய சாட்சியத்தின் அடிப்படையில் இந்த அழைப்பாணை அமைந்திருந்தால் அது பாரதூரமான விடயம் என எச்சரித்தார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டிப்பாக முன்னிலையாவார் என்பதே எமது தற்போதைய முடிவாகும். அவர் ஒருபோதும் கேள்விகளுக்கு அஞ்சி ஓடுபவர் அல்ல. இருப்பினும், நாம் சில சட்ட அம்சங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளது. இது குறித்து இன்றைய ஆலோசனையில் சட்டத்தரணிகள் குழு ஆராயும். இருந்தபோதும், எமது முடிவில் மாற்றம் இல்லை. அதன்படி, அவர் நாளை கலந்துகொள்வார்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
கபில சந்திரசேனவின் வாக்குமூலம் சட்டவிரோதமானது என நிரூபிக்கப்பட்டால், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
