செவ்வாய்க்கிழமை டிரம்ப் சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஈரான் கையாளும் விதம் குறித்து டொனால்ட் டிரம்ப் அதிருப்தியடைந்துள்ளார். இதனால், கடந்த வாரங்களை விட இப்போது மீண்டும் ஒரு பாரிய இராணுவத் தாக்குதலை (Combat operations) ஆரம்பிப்பது குறித்து அவர் மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப்பின் உதவியாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து மூடப்பட்டிருப்பது மற்றும் ஈரானியத் தலைமைக்குள் நிலவும் பிளவுகள் காரணமாக அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் அவர்களால் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முடியாமல் போவது போன்றவற்றால் டிரம்ப் பொறுமையிழந்துள்ளதாக இந்த விவாதங்களை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானின் சமீபத்திய பதிலை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” மற்றும் “முட்டாள்தனமானது” என்று டிரம்ப் கருதுவதாகவும், தெஹ்ரான் ஒரு தீவிரமான பேச்சுவார்த்தை நிலையை எடுக்கத் தயாராக உள்ளதா என்று பல அதிகாரிகள் கேள்வி எழுப்புவதாகவும் அவர்கள் கூறினர்.
நிர்வாகத்திற்குள் அடுத்தகட்டமாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பென்டகன் அதிகாரிகள் உட்பட சிலர், ஈரானை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வருவதற்கு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் (Targeted strikes) மூலம் ஈரானின் நிலையை மேலும் பலவீனப்படுத்த வேண்டும் என்று வாதிடுகின்றனர். எவ்வாறாயினும், மற்றவர்கள் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளுக்கு இன்னும் ஒரு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
டிரம்ப்பின் ஆலோசகர்கள் பலர், பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஈரானுடனான தங்கள் தொடர்புகளில் இன்னும் நேரடியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். டிரம்ப் பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்துவது போல, பாகிஸ்தானியர்கள் அதனை ஈரானிடம் தீவிரமாகத் தெரிவிக்கிறார்களா என்று சில அதிகாரிகள் நீண்டகாலமாகச் சந்தேகித்து வருகின்றனர். மேலும், ஈரான் கூறும் விடயங்களை விடவும் சற்று சாதகமான ஒரு வடிவத்தையே பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பகிர்ந்து கொள்வதாகச் சில அதிகாரிகள் நம்புகின்றனர்.
“டிரம்ப் அதிருப்தியடைந்துள்ளார் என்றும், இராஜதந்திர ரீதியாக ஈடுபடுவதற்கு இதுவே அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு என்றும் பிராந்திய நாடுகள் மற்றும் பாகிஸ்தான் மூலம் ஈரானுக்குத் தெரியப்படுத்த கடும் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் ஈரான் அதற்கு செவிசாய்ப்பதாகவோ அல்லது யாரையும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவோ தெரியவில்லை” என பிராந்திய அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளை அணுகுவதில் அமெரிக்காவும் ஈரானும் வெவ்வேறு காலக்கெடு மற்றும் சகிப்புத்தன்மையுடன் இயங்கி வருவதாகவும், தெஹ்ரான் பல தசாப்தங்களாக பொருளாதார அழுத்தத்தைத் தாங்கி நிற்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க டிரம்ப் திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவை மீண்டும் சந்தித்தார். செவ்வாய்க்கிழமை மதியம் ஜனாதிபதி சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
