ஐந்து வயதிற்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களில் 10.1% பேர் குள்ளத்தன்மையாலும், 16.1% பேர் குறைந்த எடையாலும் பாதிப்பு
வளர்ந்த பெண்களில் 47% பேரும், ஆண்களில் 30% பேரும் உடற்பருமன் (Obesity) பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்
இலங்கையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் (Malnutrition) பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் (Health Promotion Bureau) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மருத்துவர் ஜாசிங்க, சிறுவயதில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகள், பிற்காலத்தில் உடற்பருமன் (Obesity) நோய்க்கு ஆளாகும் அபாயமும் உள்ளதாக எச்சரித்தார்.
ஐந்து வயதிற்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி அவர் பேசியதாவது:
“தற்போது சிறுவர்களிடையே (Stunting) 10.1% ஆகவும், குறைந்த எடை (Underweight) 16.1% ஆகவும் உள்ளது. அதேவேளையில், அதிக எடை (Overweight) கொண்டவர்களின் அளவு 0.5% என்ற ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.”
“இந்த புள்ளிவிவரங்கள் எமது நாட்டு சிறுவர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. இத்தகையதொரு சூழ்நிலையில், சிறுவயதில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கொண்ட குழந்தைகள், பெரும்பாலும் தங்களது இளமைப் பருவத்திலும் முதிர்ந்த வயதிலும் உடற்பருமன் நிலைக்கு மாறுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும், வளர்ந்த பெரியவர்களிடையே அதிகரித்து வரும் உடற்பருமன் விகிதங்கள் குறித்த கவலைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது பெண்களில் 47% பேரும், ஆண்களில் 30% பேரும் உடற்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த புள்ளிவிவரங்கள் முறையே 15% மற்றும் 6% ஆக மாறக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
