கோலாலம்பூர், ஜூலை 22: மலேசியாவின் சிலாங்கூர் (Selangor) மாநிலத்தின் ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில் இலங்கை பெண் ஒருவரைக் பலவந்தமாக தொழிலில் ஈடுபடுத்தியபாலியல் மற்றும் உடல் ரீதியான சுரண்டல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய இலங்கை முதலாளி ஒருவர் அந்நாட்டு குடிவரவுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஜெஞ்சாரோம் பகுதியில் அமைந்துள்ள மூன்று இடங்களில் மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் கடத்தல் தடுப்புப் பிரிவு (ATIPSOM) அதிகாரிகள் விசேட சோதனைகளை நடத்தினர்.

இச்சோதனை நடவடிக்கையின் போது, கட்டாயத் தொழிலாளியாகப் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இலங்கை பெண் ஒருவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தாதுக் ஜக்காரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) வெளியிட்டுள்ள அறிக்கையில்;
“வேலைவாய்ப்பு மற்றும் வேலை அனுமதிப் பத்திரம் (Work Permit) பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டே குறித்த பெண் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர் சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் அவர் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை:
-
ஊதியம் வழங்கப்படாமல் கட்டாய வேலை வாங்கப்பட்டமை.
-
போதுமான உணவு வழங்கப்படாமை மற்றும் நடமாட்டங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டமை.
-
அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தலாக உடல் ரீதியான வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டமை.
கூடுதல் கைதுகள்: இச்சோதனை நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது விசா அற்ற முறையில் தங்கியிருந்த 21 முதல் 51 வயதுக்குட்பட்ட மேலும் 6 இலங்கையர்கள் (4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியக் குடிமகனைத் திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால சமூக விஜயப் விசா (Long-Term Social Visit Pass) வைத்துள்ள 38 வயதுடைய பிரதான சந்தேகநபருக்கு எதிராக, மலேசிய ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
