கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘சிறுவர்களுக்கான வைத்தியசாலையில்’ (Hospital for Sick Children – SickKids) பணிபுரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 44 வயதுடைய வைத்தியர் டிலான் திசாநாயக்க (Dr. Dylan Dissanayake), இணையம் ஊடாகச் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பார்வையிட்டமை, பதிவிறக்கம் செய்தமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொரொன்டோ பொலிஸ் சேவையின் ‘இணையவழிச் சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினரால்’ (Internet Child Exploitation Unit) மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 21ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.
2026 ஜனவரியில் ஆரம்பமான புலனாய்வு: டொரொன்டோ பொலிஸாரின் கூற்றுப்படி, வைத்தியர் டிலான் திசாநாயக்க மீதான விசாரணைகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுக் பிடியாணையைப் (Search Warrant) பெற்ற பொலிஸார், கடந்த பிப்ரவரி மாதம் சந்தேகநபரின் இல்லத்திலும், அவர் பணிபுரிந்த வைத்தியசாலையிலும் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.
இச் சோதனைகளின் போது, சட்டவிரோத இணையப் பொருட்களைப் பெறப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கணினிகள் உள்ளிட்ட பல மின்னணுச் சாதனங்களைப் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள 44 வயதான இக் குறிப்பிட்ட வைத்தியர், விசாரணைகளுக்காக ஒன்டாரியோ மேல் நீதிமன்றத்தில் (Ontario Superior Court) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பொலிஸ் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் விளக்கம்:
நோயாளி பாதுகாப்பு: சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும், வைத்தியசாலையில் அவர் வழங்கிய மருத்துவச் சேவைகளுக்கும் அல்லது சிகிச்சையளிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இருப்பற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என டொரொன்டோ பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பணிநீக்கம் மற்றும் அதிரடி நடவடிக்கை: இக் குற்றச்சாட்டுகளால் தாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ‘SickKids’ வைத்தியசாலை நிர்வாகம், பொலிஸ் விசாரணைத் தகவலை அறிந்த உடனடியாகவே வைத்தியர் டிலான் திசாநாயக்கவைப் பணி இடைநிறுத்தம் (Suspension) செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன், இச் சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் அல்லது நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தகவல்கள் இருப்பின், தொடர்பு கொள்வதற்காக விசேட மின்னஞ்சல் முகவரியொன்றையும் வைத்தியசாலை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நீதிமன்ற விசாரணைகள் நிறைவடையும் வரை இக் குற்றச்சாட்டுகள் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும், சந்தேகநபர் சட்டத்தின் முன் குற்றமற்றவராகவே கருதப்படுவார் என்றும் டொரொன்டோ பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
