யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிநீர் விநியோகம், வெள்ளநீர் தேங்கும் வீதிகள், வீடுகள் மற்றும் காணிகளற்ற குடும்பங்களின் நிலைமை உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய மாவட்ட திட்டமிடல் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை :
இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், அமைச்சர், வ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைத் துறைசார் ரீதியில் ஒருங்கிணைத்து, அவற்றின் சாதக, பாதக அம்சங்களை முன்கூட்டியே ஆராய்ந்து, நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதில் மாவட்ட மட்டத் திட்டமிடல் கூட்டம் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், ஒவ்வொரு துறையினதும் விடயங்களை விரிவாக ஆராய்வதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாவட்டத் திட்டமிடல் கூட்டத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் முன்கூட்டியே கலந்துரையாடி, திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வீதி அபிவிருத்தித் திட்டங்களைத் தனித்தனியாக அணுகாமல், அவற்றுடன் தொடர்புடைய ஏனைய உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தித் தேவைகளையும் கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்த திட்டமிடலை மேற்கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைத்து, அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குடிநீர், வெள்ளநீர் தேக்கம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆராய்வு :
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் குடிநீர்த் தேவைகள், வெள்ளநீர் தேங்கும் வீதிகள், மலசலகூட வசதிகள் இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை, வீடுகள் மற்றும் காணிகளற்ற குடும்பங்களின் விபரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சமூக சக்தி வேலைத்திட்டங்கள், கல்விச் சீர்திருத்தங்கள், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் 31.08.2026 வரை 6.28 வீதமான வீடுகளுக்கே குடிநீர் விநியோகம் – 2030 ஆம் ஆண்டில் 90.66 இலக்கை அடையத் திட்டம் :
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டபோது, இதுவரை 6.28 வீதமான வீடுகளுக்கே குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டில் திட்டம் நிறைவடையும் போது 90.66 வீதமான வீடுகளுக்குக் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்தும் நோக்கில், குடிநீர் வழங்கப்பட்டுள்ள பகுதிகள், எதிர்காலத்தில் குடிநீர் வழங்கப்படவுள்ள பகுதிகள் மற்றும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான வரைபடங்களுடன் கூடிய விரிவான தகவல்களை அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்டச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்குமாறு கௌரவ அமைச்சர் அவர்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், வீதிகளின் இரு பகுதிக்கும் குடிநீர் விநியோகக் குழாய்களைப் பொருத்துவதன் மூலமே அனைத்து வீடுகளுக்கும் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, குடிநீர் விநியோகத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம், குழாய் வலையமைப்பின் விபரங்கள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பிரதேச ரீதியாகப் பகிர்ந்து, திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் கெளரவ அமைச்சரால் வலியுறுத்தப்பட்டது.
வாழ்வாதார மேம்பாடு மற்றும் வீடமைப்புத் தேவைகள் தொடர்பான துல்லியமான தரவுகளைத் திரட்டுமாறு அமைச்சர் அறிவுறுத்தல்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான குடும்பங்களின் எண்ணிக்கையையும், காணியற்ற குடும்பங்களின் விபரங்களையும் துல்லியமாகத் தொகுத்துப் பட்டியலிட்டு அனுப்புமாறு பிரதேச செயலாளர்களுக்கு கெளரவ அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
அனர்த்த இடர் குறைப்புத் திட்டங்களுக்கு 38.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு :
2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது, அனர்த்த இடர் குறைப்புக்காக 30 திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு இதுவரை 38.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 334 திட்டங்கள் :
சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 334 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றுக்காக 651.96 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக அதன் முன்னேற்றம் தொடர்பிலும் அமைச்சரால் ஆராயப்பட்டது.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் இதுவரை குறைந்தளவிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தும் வகையில், நடைமுறைப்படுத்தக்கூடிய பாரிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளை விரைவாகத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், இத்தகைய திட்ட முன்மொழிவுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அவற்றை 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டங்களில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.
காணியற்ற மற்றும் வீடற்ற மக்களுக்காகத் தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் வலியுறுத்தல்!
காணி மற்றும் வீடு இல்லாத மக்களின் வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தென்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுவது போன்ற தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை யாழ்ப்பாண மாவட்டத்திலும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணியற்ற மற்றும் வீடற்ற மக்களுக்கான வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வாறான மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
மேலும், இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான அரச காணிகள் உள்ளனவா எனவும் அவர் வினவினார்.
இதன்போது, சாவகச்சேரி பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை க்கு சொந்தமான காணி இருப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சாவகச்சேரி உள்ளிட்ட பொருத்தமான பகுதிகளில் காணியற்ற மற்றும் வீடற்ற மக்களின் தேவைகளுக்கு ஏற்ப தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் வலியுறுத்தினார்.
கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி :
தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தத் திட்டங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில்
புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தரம் 2 மற்றும் தரம் 6 வகுப்புகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டது.
அதேவேளை, தற்போதைய காலப்பகுதியில் அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் பாடசாலை மட்டத்தில் உளவியல் கல்வி மற்றும் ஆலோசனைச் சேவைகளின் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பங்கு பற்றிய வர்கள் விபரங்கள் :
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் நிரஞ்சன், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) பா. ஜெயகரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ். கபிலன், மாவட்ட மட்டப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர், சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள், விவசாயத் துறை உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.