எழுதியவர்: தானியா டி சில்வா FT
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறு அரசியல் கொந்தளிப்பு, பாகுபாடு, இன பதற்றங்கள், கிளர்ச்சி, வன்முறை மற்றும் போரினால் அடையாளப்படுத்தப்படுகிறது. இருப்பினும், இளம் தலைமுறை இலங்கையர்களுக்கு, இந்த வரலாற்றின் பெரும் பகுதி துண்டு துண்டாகவும், சர்ச்சைக்குரியதாகவும் அல்லது முறையான கல்வியில் விடுபட்டதாகவும் உள்ளது.
(Teardrop Nation) என்ற புதிய நான்கு பாகங்கள் கொண்ட ஆவணப்படத் தொடர், நாட்டின் அரசியல் மற்றும் மோதல் வரலாற்றை பரந்த பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் அந்த இடைவெளியை நிரப்ப முயல்கிறது.
இந்தத் தொடர் அக்டோபர் 8 ஆம் தேதி கொழும்பு சிட்டி சென்டரில் உள்ள ‘ஸ்கோப் சினிமாஸ் மல்டிபிளெக்ஸில்’ உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சாரா கபீர் (Sarah Kabir) திட்டப் பணிப்பாளராகச் செயல்பட, ‘ப்ராஜெக்ட் 72’ (Project 72) நிறுவனத்தால் ஆறு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ‘டியர்டிராப் நேஷன்’, சுதந்திரத்திற்கு முந்தைய காலம் முதல் 2009 இல் உள்நாட்டுப் போர் முடியும் வரையிலான காலப்பகுதியில் இலங்கையை வடிவமைத்த நிகழ்வுகள் மற்றும் முடிவுகளை ஆராய வரலாற்றுப் பதிவுகள், ஆவணக் காப்பகப் பொருட்கள், நிபுணர்களின் பார்வைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை ஒன்றிணைக்கிறது.
“இலங்கையில் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நமது கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும்” என்று கபீர் கூறினார். “இந்த வரலாற்றை குறிப்பாக இளைஞர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக மாற்றவும், அவர்கள் அதை யோசனையுடனும் விமர்சன ரீதியாகவும் அணுக ஊக்குவிப்பதற்காகவே நாங்கள் டியர்டிராப் நேஷனை உருவாக்கினோம்”.
மோதல் எவ்வாறு தொடங்கியது என்பதைப் புரிந்துகொள்வது

நல்லிணக்கத் துறையில் கபீரின் பத்தாண்டு காலப் பணியிலிருந்தே இந்த ஆவணப்படத்திற்கான யோசனை உருவானது.
இத்துறையில் பணியாற்றியபோது, இலங்கையின் மோதலின் வரலாற்று மூலங்களைப் புரிந்துகொள்ள வேண்டியதன் தேவையைத் தான் அடிக்கடி உணர்ந்ததாக அவர் கூறினார். உதாரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஏன் உருவானார்கள் என்பது போன்ற கேள்விகளை, அதற்கு முன் நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை முதலில் ஆராயாமல் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது.
கபீருக்கு, இது ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியைச் சுட்டிக்காட்டியது.
“எங்கே தவறு நடந்தது என்பது பற்றிய புரிதல் குறைவாக இருந்தது,” என்று அவர் கூறினார். “விடுதலைப் புலிகள் ஏன் உருவானார்கள் போன்ற கேள்விகள் அரிதாகவே கேட்கப்பட்டன”.
இக்குழு 33 நேர்காணல்களை நடத்தியது (ஒவ்வொன்றும் சராசரியாக இரண்டு மணி நேரம்), அதே வேளையில் 40 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தது. திட்டம் முழுவதும் ஐந்து கல்வி ஆலோசகர்கள் ஈடுபட்டு, உரைகள் மற்றும் திருத்தங்கள் குறித்து கருத்துக்களை வழங்கியதுடன், குழுவிற்கு தலைப்பின் சிக்கலான தன்மையைக் கையாள உதவினர்.
ஆராய்ச்சிப் பணியில் விரிவான ஆவணக் காப்பகப் பணிகள், வரலாற்று இதழ்கள், புத்தகங்கள் மற்றும் பல்வேறு கண்ணோட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடனான உரையாடல்களும் அடங்கும்.
“ஆராய்ச்சிப் பகுதிதான் நான் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் எடுத்தது, ஏனென்றால் எனக்குத் தெரிந்ததை விடவும் அங்கு அதிகமாக இருந்தது” என்று கபீர் கூறினார்.
நான்கு பாகங்கள், ஒரு வரலாறு

‘டியர்டிராப் நேஷன்’ நான்கு பாகங்களில் காலவரிசைப்படி விரிவடைகிறது: தி சீட்ஸ் வீ சோ (The Seeds We Sow), தி டிரிகர் (The Trigger), பேட்டில் ஃபார் பீஸ் (Battle for Peace) மற்றும் வார் இன் பாரடைஸ் (War in Paradise).
முதல் பாகம் (The Seeds We Sow): மோதலின் அடித்தளத்தை நிறுவுகிறது மற்றும் இலங்கையின் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்திற்கு மாறிய காலத்துடன் தொடங்குகிறது. “நாம் யார், இலங்கையராக இருப்பது என்றால் என்ன?” என்ற அடிப்படை கேள்வி இதன் மையத்தில் உள்ளது. இது வர்க்க மற்றும் சாதிப் பிரிவினைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் பாகுபாட்டுக் கொள்கைகளை ஆராய்கிறது. மேலும், தொடர்ச்சியான அரசியல் முடிவுகள் சமூகத்திற்குள் வளர்ந்து வரும் பிரிவினைகளுக்கு எவ்வாறு பங்களித்தன என்பதைக் தடமறிகிறது. முதல் தமிழருக்கு எதிரான கலவரம், குடியுரிமைச் சட்டம், சிங்களம் மட்டும் சட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பின் அறிமுகம், வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் இளைஞர் மத்தியிலான அமைதியின்மைக்குக் காரணமான பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட மாற்றங்களை இந்தப் பகுதி ஆராய்கிறது. வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு பகுதிகளிலும் புரட்சிகர இயக்கங்களின் எழுச்சியையும் இது ஆராய்கிறது.
இரண்டாம் பாகம் (The Trigger): அரசியல் மற்றும் சமூக பதற்றங்கள் தீவிரமடைந்து ஆயுத மோதலாக உருவெடுத்த காலத்திற்கு நகர்கிறது. இது முதலாவது ஈழப் போர் உருவானதற்கான காரணிகளையும், யாழ் பொது நூலக எரிப்பு மற்றும் கறுப்பு ஜூலை போன்ற முக்கிய நிகழ்வுகளின் விளைவுகளையும் ஆராய்கிறது. தமிழ் அரசியல் எதிர்ப்பைச் சுற்றியுள்ள எளிமைப்படுத்தப்பட்ட விவரிப்புகளை இந்த ஆவணப்படம் சிக்கலாக்குகிறது. ‘ப்ராஜெக்ட் 72’ இன் கூற்றுப்படி, வடக்கில் அரசாங்கக் கொள்கைகளை எதிர்த்த ஒரே அமைப்பு விடுதலைப் புலிகள் மட்டுமல்ல; ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டத்தைக் கையாளாத குழுக்கள் உட்பட வேறுபட்ட அணுகுமுறைகளுடன் பல அமைப்புகள்

மூன்றாம் பாகம் (Battle for Peace): போருக்கும் அமைதிக்கான முயற்சிகளுக்கும் இடையிலான நிலையான இழுபறியால் வரையறுக்கப்பட்ட ஒரு காலத்தை ஆராய்கிறது. இது இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் அரசியல் தீர்வுகளை எட்ட மேற்கொண்ட முயற்சிகளையும், நாட்டின் நெருக்கடிகளைத் தீர்ப்பதில் சர்வதேச தலையீட்டைப் பெற முயற்சித்ததையும் பின்தொடர்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் வடக்கு, தெற்கு ஆகிய இரு சமூகங்களிலும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் இதில் முக்கிய கவனம் பெறுகின்றன. காணாமல் போதல்கள், அச்சுறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் முக்கிய உள்ளூர், சர்வதேச தலைவர்களின் படுகொலைகள் உட்பட இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றின் மிக ரத்தமயமான காலங்களில் ஒன்றையும் இந்தப் பகுதி ஆராய்கிறது.
இறுதிப் பாகம் (War in Paradise): மோதலின் பிந்தைய கட்டங்களையும், மூன்றாவது மற்றும் நான்காவது ஈழப் போர்களின் மனித இழப்புகளையும் ஆராய்கிறது. புதுப்பிக்கப்பட்ட போருக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தங்களுக்கான மேலும் சில முயற்சிகளை இது பின்தொடர்கிறது. “உண்மையில் யாராவது வென்றார்களா?” என்ற கேள்வி இதன் மையத்தில் உள்ளது. போரின் முடிவு பெரிய அளவிலான ஆயுத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, ஆனால் அந்த இராணுவ முடிவை மகத்தான உயிர் இழப்புகள், தீர்க்கப்படாத கேள்விகள், அங்கீகரிக்கப்படாத வரலாறுகள் மற்றும் பல தசாப்த கால வன்முறைகளால் ஏற்பட்ட ஆறாத வடுக்களுடன் ஆவணப்படம் ஒப்பிடுகிறது.
கருப்பு வெள்ளையாக மட்டும் இல்லாத ஒரு வரலாறு
வரலாற்றை எப்போதும் ஒரே ஒரு கதையாகச் சுருக்கிவிட முடியாது என்பதை அங்கீகரிப்பதே ‘டியர்டிராப் நேஷன்’ பின்னணியில் உள்ள முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.
பார்வையாளர்கள் என்ன நம்ப வேண்டும் என்று கூறுவதை விட, வெவ்வேறு கோணங்களை முன்வைக்கவே இந்தத் தொடர் வேண்டுமென்றே முயற்சிக்கிறது என்று கபீர் கூறினார். “இதன் மூலம் மக்கள் புரிந்துகொள்ள விரும்புவது என்னவென்றால், சில நேரங்களில் உங்கள் கருத்து மட்டுமே உண்மையாக இருக்காது” என்று அவர் கூறினார்.
உண்மைக்கும் விளக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு ஆராய்ச்சி செயல்முறைக்கு மிகவும் முக்கியமானது.
கபீர் குடியுரிமைச் சட்டத்தை ஒரு உதாரணமாகக் கூறினார். 700,000 மக்கள் வாக்குரிமையை இழந்தனர் என்பது வரலாற்று ரீதியாக நிறுவப்படலாம். இருப்பினும், அந்த முடிவின் பின்னணியில் உள்ள நோக்கங்களை உறுதியாகத் தீர்மானிப்பது கடினம் மற்றும் அதில் பல்வேறு விளக்கங்கள் அடங்கும்.
இளைஞர்களுக்குக் கடினமான வரலாற்றை எளிதாக்குதல்
ஒரு புத்தகத்திற்குப் பதிலாக ஆவணப் படத்தைப் பயன்படுத்திய முடிவு, இளம் பார்வையாளர்களுக்கு இந்தத் தலைப்பை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் தேவையின் ஒரு பகுதியாகும் என்று கபீர் கூறினார். இந்தத் தொடர் தெளிவான மொழி, காட்சி ரீதியிலான கதைகூறல் மற்றும் ஆக்கபூர்வமான ஆவணப்பட நுட்பங்களைப் பயன்படுத்தி, தலைப்பை எளிமைப்படுத்தாமல் சிக்கலான வரலாற்றுப் பொருட்களை ஈர்க்கக்கூடியதாக மாற்றுகிறது.
பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலமாக இளைஞர்களுடன் மேலும் இணைப்புகளை விரிவுபடுத்தவும், திரையிடல்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் திட்டம் திட்டமிட்டுள்ளது.

இலங்கைக்கே உரிய ஆவணக் காப்பகங்களைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள்
இலங்கையைப் பற்றிய ஒரு வரலாற்று ஆவணப்படத்தை உருவாக்குவது என்பது நாட்டின் ஆவணக் காப்பகங்களின் நிலை மற்றும் அணுகல் தன்மையையும் எதிர்கொள்வதைக் குறிக்கிறது. ஆவணக் காப்பக ஆராய்ச்சியை இத்திட்டத்தின் மிகவும் கடினமான அம்சங்களில் ஒன்றாக கபீர் விவரித்தார். தேசிய ஆவணக் காப்பகங்கள் மற்றும் காட்சிப் பொருட்கள் பெரும்பாலும் மோசமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அவசர மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆறு ஆண்டுகால விடாமுயற்சி
மற்ற பொறுப்புகளைச் சமாளித்து, தேசிய நெருக்கடி காலங்களில் பணியாற்றியபோது, இந்தத் திட்டம் சில நேரங்களில் சவாலானதாக இருந்ததை கபீர் ஒப்புக்கொண்டார். ஆனால் விடாமுயற்சியே திட்டத்தை முன்னோக்கி நகர்த்தியது என்று அவர் கூறினார்