1987ம் ஆண்டு ஒக்டோபர் பத்தாம் திகதி யாழ்குடாநாட்டின் பல பகுதிகளை இலக்குவைத்து இந்திய அமைதிப்படையினர் கண்மூடித்தனமான வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் கிழக்கை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சமடைந்திருந்தனர்.பாடசாலை வாயிலில் வெள்ளை கொடிகள் காணப்பட்டன.
ஓக்டோபர் 24ம் திகதி இராணுவாகனங்களில் கேகேஎஸ் வீதியூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி நகரமுயன்ற இந்திய அமைதிகாக்கும் படையினர் மக்கள் தஞ்சமடைந்திருந்த கொக்குவில் இந்து கல்லூரியை நோக்கி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதன்போது ஒரு வகுப்பறைக்குள் தஞ்சமடைந்திருந்த 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.காயமடைந்த 14 பேர் சிறிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் போதிய மருத்துவசிகிச்சையின்மையால் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு உரிய இறுதிக்கிரியைகளை செய்வதற்கோ அல்லது அவர்களது உடல்களை மயானங்களுக்கு எடுத்துச்செல்வதற்கோ வழியில்லாத நிலையில் அவர்களின் உடல்கள் பாடசாலைக்குள்ளேயே புதைக்கப்பட்டன.
இந்திய அமைதிப்படையினரின் எறிகணை தாக்குதலில் சிக்கி யாழ்பல்கலைகழக பேராசிரியர் பேராசிரியர் சந்திரசேகரமும் கொல்லப்பட்டார்.
நந்தாவில் மேற்கு ஒழுங்கையை சேர்ந்த சின்னத்துரை பஞ்சலிங்கம் தனது சத்தியக்கடதாசியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எங்கள் பகுதியை நோக்கி தாக்குதல் இடம்பெற்றதால் எங்கள் வீட்டிலிருந்து 500 மீற்றர் தூரத்திலிருந்த கொக்குவில் இந்து கல்லூரியில் நாங்கள் தஞ்சமடைந்தோம்.
நாங்கள் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தவேளை இந்திய இராணுவத்தினர் கொக்குவில் சந்தியிலிருந்து தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். எனது சகோதரி கமலாதேவி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார் வேறு மூவரும் கொல்லப்பட்டனர், நாங்கள் அவர்களின் உடல்களை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு கொக்குவில் இந்து கல்லூரியை நோக்கி தப்பியோடினோம்.அங்கு ஏற்கனவே 30 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.