
கிளிநொச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டம்.மாவட்ட உணவு பாதுகாப்பு தொடர்பான முதலாவது கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும்மாவட்ட உணவு பாதுகாப்பு குழு தலைவருமான சு.முரளிதரன் மற்றும் வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகள் ,கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழு இணைத்தலைவருமான
ச.சிவசிறீ ஆகியோரின் இணைத்தலைமையில்
மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதன் அவர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் நிரந்தர உபகுழுக்களாக திட்டமிடல் குழு,உணவுப் பாதுகாப்பு குழு, மற்றும் விலைநிர்ணய குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் சுற்றுலா அபிவிருத்தி குழு அமைக்கப்பட உள்ளதாகவும்
அந்தவகையில் சுற்றுநிருபத்தின் பிரகாரம் மாவட்டச் செயலாளர் மற்றும் அந்தந்த மாகாணங்களின் விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், நீர்ப்பாசனம் விவசாயம்,சுகாதாரம், நன்னீர் மீன்பிடி,கால்நடை உணவு உற்பத்தி,காலநிலை,அனர்த்தம், உள்ளி்ட்ட துறைசார் திணைக்கள தலைவர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்துதெரிவித்த
வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகள் ,கால்நடை அபிவிருத்தி ,நீர்ப்பாசனம்,மீன்பிடி,நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு . சிவசிறீ அவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வறுமை நிலைக்கு உட்பட்ட மாவட்டங்களாக காணப்படுவதாகவும் எனவே இங்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு உற்பத்திக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அத்துடன் விவசாய நடவடிக்கைகளுடன் இணைந்ததாக உப உணவு பயிர் உற்பத்திகளை செய்வதன் மூலம் போஷாக்கான உணவு கிடைப்பதனை உறுதி செய்ய முடியுமெனவும், அதற்காக தரமான விதைகளை பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்துவதுடன் களைகளை கட்டுப்படுத்துவதன் அவசியத்தினையும் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் நன்னீர் மீன்பிடிக்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதால் அதனை அதிகம் மேற்கொள்ளவும், எதிர்பாராத விதமாக எதிர்கொள்ளும்
காலநிலை பிரச்சினைகளை கருத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
மேலும் பெறுமதி கூட்டப்பட்ட போஷாக்கான உணவு உற்பத்திகளை சந்தைப்படுத்துவதன் அவசியம் குறித்தும் இச் செயற்திட்டத்துடன் தொடர்புடைய அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இக்குழுவின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து உணவுப்பாதுகாப்பு குழுவின் தொழிற்பாடுகள் தொடர்பாக சுகாதார திணைக்களம்,நீர்ப்பாசன திணைக்களம்,கால்நடை அபிவிருத்தி திணைக்களம், கல்வித்திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களங்கள் ரீதியாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் காலாண்டுக்கு ஒருமுறை இக் கலந்துரையாடல் தொடர்பான தீர்மானங்களை அறிக்கையிடவும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பகிர்ந்தளிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள காணிகள்,குறைந்த பயன்பாட்டில் உள்ள காணிகள்,
நிலத்தடி நீர் மாசடைதல்,வனஜீவராசிகளால் விவசாய துறை எதிர்கொள்ளும் சவால்கள்,பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் ,மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷாக்கின்மை பிரச்சினைகள் ,நெல் களஞ்சிய வசதிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட துறைசார்ந்த விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு உற்பத்தி தரவுகள் மிக அவசியமாவதாகவும் அவற்றை சேகரித்து நிரைப்படுத்த உரிய திணைக்களங்களுக்கு அரசாங்க அதிபரரால் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் தொடர்புடைய திணைக்களங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள திட்டங்களை சமர்ப்பிக்கவும் அரசாங்க அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,நெல் சந்தைப்படுத்தும் சபை,நீர்ப்பாசன திணைக்களம்,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்,விதைக்கள் மற்றும் மானியங்கள் திணைக்களம்,பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்,நெல் ஆராய்ச்சி நிலையம்,அனர்த்த முகாமைத்துவ பிரிவு ,காணி பயன்பாட்டுக்கொள்கை திட்டமிடல் பிரிவு,மாவட்ட விவசாய பணிப்பாளர் அலுவலகம்,கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம், தேசிய நீரியல் வள விரிவாக்கல் அலுவலர், மாவட்ட வன வளத்திணைக்களம் உள்ளிட்ட உணவுப் பாதுகாப்புடன் செயற்பாடுகளுடன் தொடர்புடைய திணைக்களங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
