பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (Protection of the State from Terrorism Act – PSTA) தொடர்பில் பரந்த அளவிலான பொதுமக்கள் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கக் கூடாது என எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (23) பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இவ்விடயத்தை எழுப்பிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பொதுமக்கள் ஆலோசனைகள் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நவம்பர் 7-ஆம் திகதி அறிவித்திருந்த போதிலும், உத்தேச சட்டமூலத்தை ஆராய்வதற்காக ஆளுகை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இன்று பிற்பகல் கூடவுள்ளதாகத் தெரிவித்தார்.
பாயிசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் தானும் உள்ளடங்கலாக அக்குழுவின் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து, குழுவின் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும், ஆனால் இறுதித் தீர்மானம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெருமளவிலான சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனைகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என வாதிட்ட , குழு ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு முன்னர் அவர்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இக்கரிசனைகளுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உத்தேச சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஆலோசனைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி உறுதியளித்திருந்ததாகக் கூறினார்.
ஆலோசனைகளில் பங்கேற்பவர்கள் அதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும், மேலதிக கரிசனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் எழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார். பிரதி சபாநாயகரின் தீர்ப்பின் ஊடாக அன்றி, இவ்விடயம் குழுவினாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது தலையிட்ட பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இவ்விடயம் குழு மட்டத்திலேயே கையாளப்பட வேண்டும் என்றும், பாராளுமன்றத்தில் இது குறித்து மேலும் விவாதிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 1979-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) சுட்டிக்காட்டித் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சாணக்கியன், அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் உத்தேச சட்டமூலத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் பாராளுமன்றம் மிகக் கவனமாக ஆராய வேண்டும் என எச்சரித்தார். சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதனை மீளாய்வு செய்யும் பொறிமுறை பாராளுமன்றத்திடம் இல்லை என்பதால், சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய கட்டமே போதிய பரிசீலனையை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானது என அவர் வாதிட்டார்.
