NDTV
நடப்பு டி20 உலகக்கோப்பையில் நட்சத்திர பேட்டர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது.
தொடர் முழுவதும் திணறி வரும் உலகின் நம்பர் 1 டி20 பேட்டரான அபிஷேக் சர்மாவை, சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடக்கவுள்ள முக்கியமான சூப்பர் 8 போட்டிக்கு முன்னதாக அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. லீக் சுற்றில் வரிசையாக மூன்று போட்டிகளில் ‘டக் அவுட்’ (0 ரன்) ஆகியிருந்த அபிஷேக், அகமதாபாத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் சூப்பர் 8 போட்டியில் ஓரளவு தொடங்கினார் (12 பந்துகளில் 15 ரன்கள்). இருப்பினும், அதை ஒரு பெரிய ஸ்கோராக மாற்றத் தவறிய அவர், ஐந்தாவது ஓவரிலேயே மார்கோ யான்சனிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அணி நிர்வாகம் அவரை நீக்கும் முடிவை எடுக்குமா என்பது சந்தேகமே. ஆனால், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அபிஷேக் சர்மாவுடன் நடத்திய தீவிரமான உரையாடல் ரசிகர்களிடையே பெரும் யூகங்களை கிளப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கம்பீர் அபிஷேக் சர்மாவிடம் மிகத் தீவிரமாக ஏதோ விவாதிப்பதைக் காண முடிகிறது. பின்னர் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட்டும் அவர்களுடன் இணைந்துகொண்டார்.
இந்த வீடியோவை பார்த்த எக்ஸ் (X) தள பயனர்கள், அந்த உரையாடல் எதைப் பற்றியதாக இருக்கும் என்பது குறித்து சில வேடிக்கையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்:
“அந்த டிரைவரைப் பிடியுங்கள்.. அவருக்குத்தான் எல்லாம் தெரியும்,” என ஒரு ரசிகர் கிண்டலாகக் கூறியுள்ளார்.
“மசாலா தோசை சிறந்ததா அல்லது சோலே பட்டூரே சிறந்ததா என்று விவாதிக்கிறார்கள் போல,” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
“ஜிஜி (கம்பீர்) சொல்கிறார்: தம்பி ரன் அடி, இல்லையென்றால் உன்னோடு சேர்ந்து எனக்கும் ஆப்பு வைப்பார்கள்,” என ஒரு பயனர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
“மெஸ்ஸி/ரொனால்டோவை விட ராஷ்ஃபோர்ட் சிறந்தவர் என்று கம்பீர் சொல்லிக்கொண்டிருப்பார்,” என மற்றொருவர் கலாய்த்துள்ளார்.
“அவர்கள் அபிஷேக்கை நம்புகிறார்கள் என்பது புரிகிறது, ஆனால் சென்னையில் நடக்கும் போட்டியில் சஞ்சு சாம்சனை விளையாட வைக்க வேண்டும்,” என ஒரு ரசிகர் ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தி தனது தோல்வியடையாத பயணத்தைத் தொடர்கிறது. இந்த 76 ரன்கள் வித்தியாசத்திலான தோல்வி, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய தோல்வியாகப் பதிவாகியுள்ளது
