துல்கிரியவில் உள்ள மாஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் 1,400 ஊழியர்களைப் பாதுகாப்பதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CP) வலியுறுத்தியுள்ளது.
உடனடித் தீர்வு காணப்படாவிட்டால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அரசாங்கத்தை எச்சரித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு:
“துல்கிரியவில் உள்ள மெத்லிய கிரீடா (Methliya Kreeda) ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு மாஸ் குழுமம் எடுத்துள்ள முடிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கை சுமார் 1,400 தொழிலாளர்களை இடம்பெயரச் செய்யும். இலங்கையின் கைத்தொழில் அடித்தளத்தை சீரழித்து வரும் தோல்வியுற்ற நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் வெளிப்பாடே இந்த மூடல் நடவடிக்கை என கட்சி எச்சரிக்கிறது.
அமேலியன் (Amalean) குடும்பத்திற்குச் சொந்தமான இந்த பாரிய நிறுவனம், தனது முழு செயற்பாடுகளையும் இந்தியாவுக்கு மாற்றி, அங்குள்ள 16 வெளிநாட்டு வசதிகளை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வேலையிழந்த சில தொழிலாளர்களுக்கு ஏனைய கிளைகளில் மாற்று வேலை வழங்கப்படலாம் என மாஸ் நிறுவனம் பரிந்துரைத்த போதிலும், இது உள்ளூர் பொருளாதாரத்தின் முறையான தொழில்மயமாக்கல் சரிவுக்கு (De-industrialisation) ஒரு போதுமான தீர்வாகாது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
இந்த மூடல் நடவடிக்கை ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; இது நவ தாராளவாதம் எனும் முற்றிய நோயின் அறிகுறியாகும். துல்கிரியவில் உள்ள இந்த நிலம், முன்னைய கிழக்கு ஜெர்மனியால் (GDR) இலங்கை மக்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு பாரிய ஜவுளி வளாகமாகும். ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சியின் தனியார்மயமாக்கல் வெறியால் அதன் சாத்தியக்கூறுகள் அழிக்கப்பட்டன. இப்போது, எஞ்சியுள்ள ஆடைத் தொழிற்சாலைகளும் இந்திய செயற்பாடுகளின் இலாபத்திற்காக கலைக்கப்படுகின்றன. இதன் சுமையை இலங்கை தொழிலாளர்கள் சுமக்க வேண்டியுள்ளது.
தொழிலாளர் குடியிருப்புகளுடன் கூடிய கைத்தொழில் ஒத்துழைப்பின் அடையாளமாகத் திகழ்ந்த இந்த வளாகம், தனியார்மயமாக்கல் உந்துதலைத் தொடர்ந்து வெறும் வெற்று கட்டிடங்களாக மாறியுள்ள கசப்பான முரண்பாட்டை கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகள்:
தனியார்மயமாக்கல் தர்க்கத்தை நிராகரித்தல்: மெத்லிய கிரீடா தொழிற்சாலையின் மூடல், தேசிய நலன்களையும் தொழிலாளர் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தனியார் மூலதனத்தை நம்பியிருப்பது ஒரு “முட்டுக்கட்டை” என்பதை நிரூபித்துள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும்.
உடனடியாக தலையிடுதல்: துல்கிரிய வளாகத்திலிருந்து சொத்துக்கள் மற்றும் இயந்திரங்களை அகற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தொழிற்சாலையை பொதுச் சொத்தாக மறுசீரமைத்தல்: தேசிய ஆடைத் தொழில் விநியோகச் சங்கிலியின் ஒரு மூலோபாய அங்கமாக, ஒரு லாபகரமான பொது உடைமை மாதிரியின் கீழ் தொழிற்சாலையை மீண்டும் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலைவாய்ப்பை உறுதி செய்தல்: துல்கிரிய ஆலையை மறுசீரமைப்பதன் மூலமோ அல்லது இத்துறையில் அரச ஆதரவுடனான வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலமோ அனைத்து 1,400 தொழிலாளர்களினதும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்
