இலங்கையின் பலவீனமான விசா கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைக் கண்காணிப்பதில் உள்ள தளர்வுகள் காரணமாக, உலகளாவிய மோசடி கும்பல்களுக்கு (scam syndicates) தீவு ஒரு கவர்ச்சிகரமான தளமாக மாறியுள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்திய வாரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 2026 ஜனவரி 1 முதல், குடிவரவு விதிமீறல்கள் முதல் அதிநவீன சைபர் குற்றங்கள் வரை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 628 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா, வியட்நாம், சீனா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த சந்தேக நபர்கள், கறுவாத்தோட்டம், மவுண்ட் லவீனியா, சிலாபம், ராஜகிரிய மற்றும் கொஸ்வத்தை போன்ற பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்
2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டு முழுவதிலும் பதிவான மொத்த வழக்குகளில் 50 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்த நிலை நீடித்தால், ஆண்டு இறுதியில் கைதுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட இருமடங்காக அதிகரிக்கக்கூடும். கம்போடியா போன்ற நாடுகள் சட்டங்களை கடுமையாக்கியுள்ளதால், அந்த குற்றச் செயல்கள் தற்போது இலங்கையை நோக்கி நகர்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நிபுணர்களின் எச்சரிக்கை
இலங்கையில் இணையவழி மோசடி நடவடிக்கைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமை தொடர்பாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர். . விசா நடைமுறைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அரசாங்கம் சரியாக முறைப்படுத்தத் தவறியமை குறித்து அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“தற்போது இலங்கை சர்வதேச மோசடி கும்பல்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. ஏனைய நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளையும் டிஜிட்டல் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தளர்வான விசா கொள்கைகள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட அனுமதி நடைமுறைகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மக்களை எல்லைகளுக்கு ஊடாக விரைவாகக் கடத்துவதற்கான தடைகளை எதிர்பாராதவிதமாகக் குறைத்துள்ளன,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தக் கடுமையான கண்காணிப்புக் குறைபாடே, சைபர் குற்றங்கள் அதிகரிப்பதற்கும், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து மோசடிப் பொருளாதாரம் இலங்கைக்கு நகர்வதற்கும் முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது,” என்றார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எளிதான விசா நடைமுறைகள், குற்றவாளிகள் எளிதாக எல்லைகளைக் கடக்க வழிவகுத்துள்ளதாக சிரேஷ்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், “அண்டை நாடான இந்தியாவைப்போல இலங்கையிலும் வெளிநாட்டினருக்கு வலுவான பயோமெட்ரிக் (Biometric) கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியாவில் சிம் கார்டு பெறுவது கூட கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டது, ஆனால் இலங்கையில் பாஸ்போர்ட் இருந்தால் எவரும் எளிதாக சிம் கார்டுகளைப் பெற முடியும்,” என்றார்.
முக்கிய சுற்றிவளைப்புகள்:
-
கொழும்பு 07 (மே 7): சைபர் மோசடி மையங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த 231 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கொல்லுப்பிட்டி: நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 74 வியட்நாம் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
-
ராஜகிரிய: மேட வெலிக்கடை வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கம்போடியா, சீனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
தலங்கம (மே 2): கொஸ்வத்தை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இயங்கி வந்த 37 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து 38 மடிக்கணினிகள் மற்றும் 194 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
சிலாபம்: ஏப்ரல் மாதம் ஒரு கடற்கரை விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
செயல்முறை மற்றும் எச்சரிக்கை
கைது செய்யப்பட்டவர்கள் சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக வேலை செய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த கும்பல்கள் கிரிப்டோகரன்சி மோசடி மற்றும் போலி ஆன்லைன் காதல் வலைகள் (fake online relationships) மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
வாடகைக்கு வீடு கொடுப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். எப்போதும் திரைச்சீலைகள் மூடப்பட்டிருப்பது, குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியே வராதது மற்றும் அதிகப்படியான மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்துவது போன்றவை சந்தேகத்திற்குரிய அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன.