கடந்த ஆண்டு வருவாய் ஈட்டலில் ஏற்பட்ட முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) அங்கீகரித்துள்ளது. எனினும், மோட்டார் வாகன இறக்குமதி வரிகள், ஏனைய இறக்குமதி வரிகள் மூலம் கிடைத்த எதிர்பாராத வருமானம் மற்றும் மூலதனச் செலவினங்களில் (Capital expenditure) செய்யப்பட்ட குறைவான செலவுகள் ஆகியவையே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
“கடந்த ஆண்டு வருவாய் ஈட்டலில் மிகவும் வலுவானதொரு ஆண்டாக அமைந்தது. உதாரணமாக, நாம் கொண்டிருந்த முதன்மை நிதி உபரி (Primary fiscal surplus) இலக்குகளை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான வருவாய் எட்டப்பட்டது. இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இதன் காரணமாக கணிசமான நிதி இடைவெளி (Fiscal space) மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருப்பதை காண்கிறோம். இருப்பினும், கடந்த ஆண்டு நிதி வருவாயில் ஏற்பட்ட இந்த வலுவான மற்றும் எதிர்பாராத அசாத்திய வளர்ச்சிக்கு, முக்கியமாக மோட்டார் வாகன வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் மூலம் கிடைத்த மிகப்பெரிய எதிர்பாராத வருமானமும் (Windfall), மூலதனச் செலவினங்களில் திட்டமிட்டதை விடக் குறைவாகச் செலவிடப்பட்டமையுமே (Under-spending) முக்கிய காரணங்களாகும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்,” என்று IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபகியோர்கியு (Evan Papageorgiou) தெரிவித்தார்.
வரி அடித்தளம் பரந்ததாக இருக்க வேண்டும் என்றும், அது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விடயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ அல்லது அதிக சுமையை ஏற்றுவதாகவோ இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
“வரி அடித்தளம் பரந்ததாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மோட்டார் வாகன இறக்குமதிகள், வருமான வரி அல்லது வாட் (VAT) போன்ற ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விடயத்திற்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ அல்லது அதன் மீது அதிக சுமையை ஏற்றுவதாகவோ இருக்கக் கூடாது. அது ஒரு பரந்த வரி அமைப்பாகவும், விரிவான வரி வலையமைப்பாகவும் இருக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், வரி விதிப்பு மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருவாய் மீண்டும் நாட்டுக்கே சென்றடைய வேண்டும் என்றும், அது பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்