GSP+ (Generalised Scheme of Preferences Plus) எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சலுகைத்திட்டத்தின் அடுத்த கட்டக் கட்டமைப்பின் கீழ், தொடர்ந்து சலுகைகளைப் பெறுவதற்கு இலங்கை விண்ணப்பிக்க உத்தேசித்துள்ளது என்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இத்திட்டமானது நாட்டின் ஏற்றுமதி மூலோபாயத்தின் ஒரு முக்கிய தூண் என்றும் அவர் விவரித்துள்ளார்.
“GSP+ சலுகைத்திட்டமானது இலங்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது,” என்று விஜேசிங்க கூறினார்.
ஐரோப்பிய சந்தையில் இன்னும் பயன்படுத்தப்படாத மிகப்பெரிய ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகை முறையைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து நாட்டின் அரசியல் தலைமைகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் ஏற்கனவே இந்த விடயம் குறித்து நாட்டின் அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடியுள்ளோம், அதற்கான நேர்மறையான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன,” என்று அவர் கூறினார்.
ஏற்றுமதியாளர்களுக்கான முன்னுரிமை வர்த்தகச் சந்தை வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், அதனை விரிவுபடுத்தவும் GSP+ திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு விண்ணப்பிக்க இலங்கை தயாராக இருப்பதாக விஜேசிங்க தெரிவித்தார்.
“எனவே, இலங்கை தொடர்ந்து GSP+ சலுகை மூலம் பயனடைய உத்தேசித்துள்ளதுடன், அடுத்த காலப்பகுதிக்காகவும் விண்ணப்பிக்க தயாராக உள்ளது,” என்று விஜேசிங்க மேலும் தெரிவித்தார்