தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டமான “பிரஜா சக்தி” திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் “ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்று (02.06.2026) ஆரம்பிக்கப்பட்டன.


அதன் ஒரு பகுதியாக ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்” நிகழ்ச்சித்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கணேசபுரம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்திற்கு அருகாமையிலுள்ள பகுதியில் நெற் தளத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் S.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) கரைச்சி பிரதேச செயலாளர், மாவட்ட பிரதம கணக்காளர்,மாவட்டச்செயலக பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர், கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள்,கிராம மட்டப் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்வேலைத்திட்டங்களின் ஊடாக கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல், நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சமூக வலுவூட்டலை உறுதிப்படுத்துதல் என்பன பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளன.
“பிரஜா சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் வறுமையற்ற, தன்னிறைவு பெற்ற, பொருளாதார ரீதியாக வலுவான கிராமங்களை உருவாக்கும் பயணத்தில் கிளிநொச்சி மாவட்டமும் உறுதியான முன்னேற்றப் பாதையை நோக்கி நகர்கிறது.
