தெற்கு லெபனானில் கைவிடப்பட்ட மற்றும் தெருக்களில் திரியும் பூனைகள் மற்றும் நாய்களைப் பராமரிப்பதற்காக அங்கேயே தங்கியிருந்த இலங்கை பெண் ஒருவர், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அல் ஜசீரா மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘ரஹ்மா’ என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், அப்பகுதியில் தொடர்ந்து மோதல்கள் நிலவி வந்தபோதிலும், அங்கிருந்து வெளியேற மறுத்து, கைவிடப்பட்ட விலங்குகளைப் பராமரிப்பதற்காகவே அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக சமூக ஊடகப் பதிவுகளும் பிராந்திய ஊடகச் செய்திகளும் தெரிவிக்கின்றன.
போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிராந்தியத்தில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பெண்ணின் மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் தரப்பில் இருந்து உடனடியாக எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.