லாரா கோஸி (Laura Gozzi) BBC
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பமானதில் இருந்து மொஸ்கோ நகரை இலக்கு வைத்து உக்ரைன் இதுவரை நடத்தியிராத மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்ய தலைநகரைச் சுற்றியுள்ள இலக்குகளை நோக்கி சுமார் 200 ட்ரோன்கள் (Drones) ஏவப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதால், நகரின் வானில் அடர்ந்த கரும்புகை மூட்டங்கள் எழும்பிப் பரவி வருகின்றன.
இத்தாக்குதல்களினால் மொஸ்கோ பிராந்தியத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஆளுநர் ஆண்ட்ரே வோரோபியோவ் (Andrei Vorobyov) தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் உக்ரைனின் சுமார் 1,000 ட்ரோன்களும் நான்கு குரூஸ் ஏவுகணைகளும் (Cruise missiles) இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் தெற்கு ரோஸ்டோவ் (Rostov) பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் கிடங்கொன்று தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொஸ்கோபிராந்தியத்தின் மீது கீவ் (Kyiv) மீண்டும் ஒருமுறை “நீண்ட தூர தடைகளை” (Long-range sanctions) விதித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் உள்நிலப்பகுதிகளை நோக்கி உக்ரைன் நடத்தும் நீண்ட தூர வான்வழித் தாக்குதல்களையே அவர் இச்சொல்லாடல் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது, ரஷ்யா இதற்கான தகுந்த இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வாரம் கீவ் நகரின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில், அங்கிருந்த முக்கிய மத வழிபாட்டுத் தலமொன்று தீக்கிரையாக்கப்பட்டதற்குப் பதிலடியாகவே இந்த பாரிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் இந்தப் போரை விரும்பவில்லை, எப்போதும் விரும்பியதும் இல்லை. ஆனால் உக்ரைன் எரிந்தால், உங்களது மாஸ்கோவும் எரியும்” என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
தென்கிழக்கு மொஸ்கோவில் உள்ள கபோட்ன்யா (Kapotnya) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாகவும், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாகவும் தாக்கப்பட்டு தீப்பற்றியதால், வானம் கரும்புகையால் சூழ்ந்தது. வெடிப்பின் பலத்த உந்தலினால் பாரிய எண்ணெய் சேமிப்புத் தொட்டியொன்றின் மூடி பல டஜன் மீற்றர் உயரத்திற்கு காற்றில் தூக்கி வீசப்பட்டதை அநேக காணொளிகள் காண்பித்தன.
அருகிலுள்ள வணிக வளாகம் ஒன்றின் மீதும் ட்ரோன் பாகங்கள் விழுந்து தீப்பற்றியதுடன், பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன் மாஸ்கோவின் நான்கு விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமடைந்தன.
ட்ரோன் தாக்குதல்களின் பின்னரான பாதிப்புப் படங்களை வெளியிட ரஷ்ய உள்ளூர் அதிகாரிகள் தடை விதித்துள்ள போதிலும், பகல் வெளிச்சத்தில் ட்ரோன்கள் வானில் பறப்பதையும், மொஸ்கோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள தொழில்பேட்டைகளில் வெடிப்புகள் ஏற்படுவதையும் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளன.
முக்கிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னர், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் அடர்த்தியையும் பலவீனமான பகுதிகளையும் கண்டறிவதற்காக, அதிகளவிலான உளவு போலி ட்ரோன்களை (Decoy drones) ஏவுவது உக்ரைனின் வழக்கமான உத்தியாக இருந்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கி நான்கரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உக்ரைனின் முன்களப் போர்க்களங்களில் நீடிக்கும் தேய்வுப் போர் (War of attrition) பல ரஷ்யர்களின் கண்ணில் படாமலேயே நகர்கிறது. எனினும், ரஷ்யா, மொஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களின் மீதான கீவின் நீண்ட தூரத் தாக்குதல்கள், சாதாரண ரஷ்யர்களுக்கும் “போரின் தாக்கத்தை நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே” ஜெலென்ஸ்கியின் நோக்கம் என்பதைக் காட்டுகின்றன.
உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 500 கிலோமீற்றர் (310 மைல்கள்) தொலைவிலுள்ள மாஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல்கள், கீவ் தனது நீண்ட தூரத் தாக்குதல் திறன்களை மேம்படுத்தியுள்ளதால் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. 2023 வசந்த காலத்தில் உக்ரைனின் முதலாவது வெற்றிகரமான ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்ய தலைநகரை எட்டிய போதிலும், அவை எப்போதாவது ஒருமுறை மட்டுமே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ட்ரோன்களுடன் நடத்தப்பட்டவை ஆகும்.
அதன் பின்னர், மொஸ்கோவைச் சுற்றி விரிவான வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defences) நிறுவப்பட்ட போதிலும், உக்ரைன் பயன்படுத்தும் ட்ரோன்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளதுடன், சில ட்ரோன்கள் அந்தப் பாதுகாப்பு வளையங்களையும் ஊடுருவியுள்ளன.
முற்றிலும் அதிநவீன தொழில்நுட்ப ட்ரோன்களின் பாரிய தாக்குதல்களுக்கு எதிராக எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. அந்தப் பாதுகாப்பை மீறிச் செல்லும் ட்ரோன்களின் தாக்குதல் வீதம் மிகக் குறைவாக இருந்தபோதிலும், இடைமறிக்கப்படும் ஏவுகணைகளின் சிதைவுகள் தரையில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.
இத்தகைய பிரம்மாண்டமான தாக்குதல்களைத் தடுப்பதில் உள்ள சவால்கள் தெரிந்ததே என்றாலும், வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலானது, மாஸ்கோவின் முக்கிய உட்கட்டமைப்புகளைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
மறுபுறம், ரஷ்யாவும் ஒரே இரவில் உக்ரைனை நோக்கி 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் (Ballistic missiles) ஏவித் தாக்கியுள்ளதாக கீவ் தெரிவித்துள்ளது.
மத்திய ரஷ்ய நகரான கசானில் (Kazan) தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுடனான உச்சிமாநாட்டை நடத்திக் கொண்டிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய தலைநகர் மீதான இந்த பாரிய தாக்குதல் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
உக்ரைனிய வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா (Andriy Sybiha) தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில், “இன்று காலை மொஸ்கோ மக்களால் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, ‘இங்கு என்ன நடக்கிறது?’ என்பதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கு என்னால் பதிலளிக்க முடியும். உங்கள் நாடு எங்களது நாட்டிற்கு எதிராக ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியது. பல வருடங்களாக அது எங்கள் மக்களைக் கொன்று குவிக்கிறது. இப்போது இங்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் என்பதால், இப்போரை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என்று புடினிடம் கேளுங்கள்” என சிபிஹா பதிவிட்டுள்ளார்
