கொழும்பு துறைமுகம் கடந்த 2025ஆம் ஆண்டில் எட்டிய சாதனை அளவிலான செயல்திறனைத் தொடர்ந்து, 2026 ஏப்ரல் மாதத்திலும்கப்பல்மாற்றிச் சரக்கேற்றல்(Transhipment) அளவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஏப்ரல் மாதத்தில் கையாளப்பட்ட 495,456 TEUகளுடன் ஒப்பிடுகையில், 2026 ஏப்ரல் மாதத்தில் கப்பல்மாற்றிச் சரக்கேற்றல்தி அளவு 22.6 சதவீதத்தால் அதிகரித்து 607,240 TEUகளாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கானகப்பல்மாற்றிச் சரக்கேற்றல்தி அளவு 14.2 சதவீதத்தால் விரிவடைந்து 2,321,704 TEUகளை எட்டியுள்ளது. கொழும்பு துறைமுகம் தெற்காசியாவின் முதன்மை கப்பல்மாற்றிச் சரக்கேற்றல் மையமாகத் தனது நிலையை உறுதிப்படுத்தி, 8,291,178 TEUகள் என்ற வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவைக் கையாண்ட 2025ஆம் ஆண்டைத் தொடர்ந்து இந்த தற்போதைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தின் மொத்த கன்டெய்னர் கையாள்கை அளவு 2026 ஏப்ரலில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 22.0 சதவீதம் அதிகரித்து 761,096 TEUகளாக உயர்ந்துள்ளது.

கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (CWIT) மிக வேகமாகத் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியதே இந்த வளர்ச்சி வேகத்திற்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் (Adani Ports), ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஒன்றினால் 35 ஆண்டுகால ‘கட்டுதல், இயக்குதல் மற்றும் மாற்றுதல்’ (BOT) ஒப்பந்தத்தின் கீழ் இந்த 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முனையம் உருவாக்கப்பட்டு, 2025 ஏப்ரலில் தனது செயல்பாடுகளை ஆரம்பித்தது. கொழும்பின் முதலாவது முழுமையாக தானியக்கமயமாக்கப்பட்ட ஆழ்கடல் முனையமான CWIT, துறைமுகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தற்போதுள்ள ஏனைய முனையங்களில் நிலவிவந்த நீண்டகால நெரிசலையும் குறைத்துள்ளது.

CWIT முனையம் 2026 ஏப்ரலில் 152,262 TEUகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு அதன் முதலாவது மாத செயல்பாட்டின் போது கையாளப்பட்ட 12,438 TEUகளுடன் ஒப்பிடுகையில் 1124.2 சதவீத வளர்ச்சியாகும். ஒட்டுமொத்த நான்கு மாத காலப்பகுதியில், CWIT இன் கன்டெய்னர் கையாள்கை அளவு 3039.9 சதவீதம் அதிகரித்து 502,066 TEUகளாக உயர்ந்துள்ளது.

புதிய கன்டெய்னர்களை CWIT முனையம் உள்வாங்கத் தொடங்கியுள்ளதால், பழைய முனையங்களின் போக்குவரத்துப் பகிர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜய கன்டெய்னர் முனையம் (JCT), யுனிட்டி கன்டெய்னர் முனையம் (UCT) மற்றும் கிழக்கு கன்டெய்னர் முனையம் (ECT) ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் இயங்கும் அரச முனையங்கள், ஏப்ரல் மாதத்தில் கன்டெய்னர் கையாள்கையில் 0.5 சதவீத சிறிய வீழ்ச்சியைப் பதிவு செய்து, கடந்த ஆண்டின் 181,934 TEUகளிலிருந்து 180,952 TEUகளாகக் குறைந்துள்ளன.

கொழும்பு சர்வதேச கன்டெய்னர் முனையம் (CICT) அதிக அளவு கன்டெய்னர்களைக் கையாளும் மிகப்பெரிய தனித்துவமான முனையமாகத் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 2026 ஏப்ரலில் 273,417 TEUகளைக் கையாண்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீத வீழ்ச்சியாகும்.

மறுபுறம், தெற்காசிய கேட்வே முனையம் (SAGT) மாதாந்த ரீதியில் மீட்சியடைவதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இதன் ஏப்ரல் மாத கன்டெய்னர் கையாள்கை அளவு 3.8 சதவீதம் அதிகரித்து 154,465 TEUகளாக விரிவடைந்துள்ளது.

மொத்த கன்டெய்னர் கையாள்கை விபரங்களின்படி, உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகள் ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும் வகையில், பொருட்கள் நிரப்பப்பட்ட (Laden) கன்டெய்னர்களின் அளவு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. 2025 ஏப்ரலில் காணப்பட்ட 46,677 TEUகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி 27 சதவீதம் அதிகரித்து 59,287 TEUகளாக உயர்ந்துள்ளது. ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான ஒட்டுமொத்த அடிப்படையில், இறக்குமதிகள் 9.7 சதவீதம் விரிவடைந்து 219,227 TEUகளை எட்டியுள்ளன.

இதேவேளை, ஏற்றுமதித் துறையும் சாதகமான போக்கைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஏற்றுமதிகள் 2026 ஏப்ரலில் 2.6 சதவீத மிதமான உயர்வைப்பதிவு செய்து 23,348 TEUகளாக அதிகரித்துள்ளன (கடந்த ஆண்டு ஏப்ரலில் 22,762 TEUகள்). ஒட்டுமொத்தமாக, முதல் நான்கு மாத காலப்பகுதிக்கான ஏற்றுமதி 100,527 TEUகளை எட்டியுள்ளதுடன், இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3.4 சதவீத விரிவாக்கமாகும்.

இந்த மேல்நோக்கிய வளர்ச்சிப் போக்கைத் தக்கவைத்துக் கொள்ளவும், தற்போதைய கொள்ளளவு நெருக்கடியைச் சமாளிக்கவும், இலங்கை துறைமுக அதிகாரசபை அண்மையில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான பாரிய முதலீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. துறைமுகத்தின் தற்போதைய அதிகபட்ச கொள்ளளவு 10 மில்லியன் TEUகளாக உள்ள நிலையில், அதற்கான தேவை 9.3 மில்லியன் TEUகளாக உயர்ந்துள்ளதால், கப்பல்கள் நீண்டநேரம் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்கு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது அவசியமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். CWIT இன் அடுத்தகட்ட விரிவாக்கங்கள் மற்றும் கிழக்கு கன்டெய்னர் முனையத்தின் (ECT) முழுமையான செயல்பாடுகள் மூலம், எதிர்வரும் ஆண்டுகளில் ஒட்டுமொத்த கொள்ளளவை 14 மில்லியன் TEUகளாக உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய வர்த்தக மாற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு ஒரு சிறந்த தளமாகத் திகழ்வதை உறுதி செய்யும்.

துறைமுக வளாகம் முழுவதும் கையாளப்பட்ட மொத்த சரக்குகளின் அளவு ஏப்ரல் மாதத்தில் 10,498,501 டன்களாக பதிவாகியுள்ளதுடன், இது ஆண்டுக்கு ஆண்டு 9.5 சதவீத அதிகரிப்பாகும்.