CNN
கடந்த ஏப்ரல் மாதம் ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர், சிறப்புப் படையினரால் மீட்கப்பட்ட அமெரிக்க போர்விமான பைலட் ஒருவர், தான் விமானத்திலிருந்து குதிப்பதற்கு (Eject) முன்னர் வான்வெளியில் கண்ட ஒரு அதிர்ச்சியூட்டும் காட்சியை விவரித்துள்ளார். பல ஈரானிய ட்ரோன்கள் (Drones) காற்றில் மிதந்தவாறு, ‘ஜெல்லிபிஷ்’ (Jellyfish – சொறிமுட்டை) வடிவிலான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, ஒன்றிணைந்து நகர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த நான்கு நம்பகமான ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னர் எங்கும் வெளிவராத இந்தத் தகவல், F-15 போர்விமானத்தின் பைலட் மீட்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட உளவுத்துறை விசாரணையின் (Debriefing) போது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறை சமூகத்திற்குள் பெரும் விவாதப் புயல் கிளம்பியுள்ள போதிலும், இதுவரை அதற்கு இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அந்த வான்படை அதிகாரி விவரித்தவாறு, ஈரானிய ட்ரோன்கள் ஒன்றிணைந்து ஒரே கட்டமைப்பாக நகர்ந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது ஈரானின் ட்ரோன் தொழில்நுட்ப ஆற்றலில் ஏற்பட்டுள்ள மிக ஆபத்தான, அதிநவீன முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
“பெரிய ட்ரோன்களுக்கு கீழே கால்களைப் போல சிறிய ட்ரோன்கள் தொங்கிக்கொண்டிருக்க, பல ட்ரோன்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ஒரே உயிரினம் போல நகர்ந்தன. அது முற்றிலும் ஏலியன் (Alien) உலகத்துப் பொருள் போன்ற பயங்கரமான காட்சியாக இருந்தது” என பைலட்டின் வாக்குமூலத்தை அறிந்த ஆதாரம் ஒன்று சிஎன்என் (CNN) ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளது.
மற்றொரு ஆதாரம் கூறுகையில், வான்வெளியில் ஒரு “ட்ரோன் கண்ணிவெடி வயலை” (Minefield of drones) பார்ப்பது போன்ற உணர்வை அது ஏற்படுத்தியதாக பைலட் குறிப்பிட்டதாகத் தெரிவித்தது.
F-15 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ட்ரோன் கூட்டமைப்பின் விசேட தொழில்நுட்ப ஆற்றலே அமெரிக்க ஜெட் விமானத்தை சுட்டுவீழ்த்துவதற்கு ஈரானுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியிருக்கலாம் என ஆரம்பகட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக இரு ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த F-15 போர்விமானத்தில் ஒரு பைலட் மற்றும் ஒரு ஆயுத அமைப்பு அதிகாரி (Weapons system officer) என இருவர் பயணித்தனர். விமானம் வீழ்த்தப்பட்ட உடனேயே அமெரிக்கப் படைகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக சிஎன்என் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த மோதலின் போது, ஈரானிய வான்பரப்பில் அமெரிக்க போர்விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். விமானத்திலிருந்து குதித்த சில மணித்தியாலங்களிலேயே பைலட் மீட்கப்பட்டார். எனினும், ஆயுத அமைப்பு அதிகாரி ஈரானியப் படைகளிடம் சிக்காமல் மலைப்பகுதிகளில் ஒரு நாளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பின்னரே மீட்கப்பட்டார். அவரும் இந்த ட்ரோன் கூட்டமைப்பைக் கண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மீட்புப் பணியின் போது, அமெரிக்காவின் இரண்டாவது விமானமான A-10 ரக விமானமும் சுட்டுவீழ்த்தப்பட்டது. ஆனால் அதன் பைலட் ஈரானிய வான்பரப்பிற்கு வெளியே பாதுகாப்பாகக் குதித்து உயிர் தப்பினார்.
பைலட் விவரித்த விடயத்தை எவ்வாறு விளக்குவது என்பது குறித்தும், அதிர்ச்சியடைந்திருந்த அந்த பைலட்டால் சம்பவத்தை துல்லியமாக நினைவுகூர முடியுமா என்பது குறித்தும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
முக்கியமாக, இந்த விபத்தின் போது அவருக்கு கடுமையான மூளை அதிர்ச்சி (Concussion) ஏற்பட்டிருந்தது. மேலும், ஈரான் போரின் போது அவர் வான்வெளியில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் குவைத் படைகளின் தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் (Friendly fire) வீழ்த்தப்பட்ட விமானிகளிலும் இவர் ஒருவராவார்.
அப்படியாயின், அமெரிக்க உளவுத்துறை இதுவரை அறிந்திராத ஈரானின் முழுமையான ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியை அவர் கண்டாரா? அல்லது ஒரு ஆரம்பகட்ட சோதனையா (Beta test)? அல்லது பாலைவனத்தில் தோன்றிய கானல் நீரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
“நீங்கள் கண்டதாகக் கூறும் காட்சியைப் பற்றி நீங்கள் முழுமையாக உறுதியாக இருக்கிறீர்களா?” என்று உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்ததாக மற்றொரு ஆதாரம் தெரிவித்தது.
இதுகுறித்து அமெரிக்க வான்படை வழங்கிய விளக்கங்கள், அமெரிக்க மத்திய கட்டளைகத்திற்கு (US Central Command) திருப்பி விடப்பட்ட போதிலும், அவர்கள் சிஎன்என் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. தேசிய உளவுத்துறை இயக்குநரகத்தின் (ODNI) அலுவலகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவும் தெஹ்ரானும் 60 நாட்கள் கால அவகாசத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே, ஈரானின் ட்ரோன் திட்டம் குறித்த இந்தக் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் முக்கியமாக ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இரு தரப்பினராலும் பரந்த அளவிலான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பைலட் விவரித்த குறிப்பிட்ட ட்ரோன் தொழில்நுட்ப ஆற்றல் ஈரானிடம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் இதற்கு முன்னர் மதிப்பிட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், ஈரான் தனது ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு சீனா மற்றும் ரஷ்யாவிடமிருந்து உதவிகளைப் பெற்று வருவதைக் காட்டும் பல அறிக்கை ஆதாரங்கள் உள்ளதாக இந்த விவகாரத்தை அறிந்த இரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பைலட் விவரித்த இந்தத் தொழில்நுட்பத்திற்கு, தொழில்நுட்ப ரீதியாக “ஒன்றிலிருந்து பலவற்றுடனான வலைப்பின்னல் தொடர்பு” (One-to-many meshed networking) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பொதுவாக, இந்த மெஷ்ட் நெட்வொர்க்கிங் (Meshed networking) தொழில்நுட்பமானது, ஒரே நேரத்தில் ஒரு ஆபரேட்டர் பல ட்ரோன்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த ஆற்றலைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே அதிநவீனமாக உள்ள ஈரானின் ட்ரோன் போர் திட்டத்தில் ஏற்படும் இத்தகைய முன்னேற்றங்கள், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
இருப்பினும், இந்த மெஷ்ட் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தை, தகுந்த உள்கட்டமைப்புகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளுக்கு இணைய இணைப்பை (Internet connectivity) வழங்குவதற்கும் கோட்பாட்டு ரீதியாகப் பயன்படுத்த முடியும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் மற்றும் அருகிலுள்ள வளைகுடா நாடுகளுக்கு எதிராக பல வாரங்களாக நீடித்த மோதலின் போது, ஈரான் தனது தாக்குதல் ட்ரோன்களை ஒரு சமச்சீரற்ற ஆயுதமாக (Asymmetric weapon) தீவிரமாகப் பயன்படுத்தியிருந்தது.
“இதுபோன்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் பெருமளவிலான நிதியையும், மனித உயிர்களையும், உழைப்பையும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்” என ட்ரோன் போர்முறை மற்றும் பாதுகாப்பு நவீனமயமாக்கல் நிபுணரும், ‘Cachai’ நிறுவனத்தின் நிறுவனருமான எம்மா பேட்ஸ் (Emma Bates) சிஎன்என் நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“ஒரு ட்ரோன் கூட்டத்தால் தனக்கென ஒரு குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்கி, அந்த வடிவத்தை வான்வெளியில் தக்கவைக்க முடியுமெனில், அதோடு அதில் வெடிபொருட்களும் பொருத்தப்பட்டு, முதல் தாக்குதலில் அழியாத இலக்குகளை அழிக்க கூடுதல் உதிரிப் பாகங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க முடியுமெனில் — அது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான போர்முறையாகும்” என்று பேட்ஸ் மேலும் குறிப்பிட்டார்.
