2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அரசாங்க வருவாய் வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
‘2027 நிதிக் கொள்கை மூலோபாயக் கூற்றில்’ (Fiscal Strategy Statement 2027) வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னறிவிப்பின்படி, மானியங்கள் (Grants) உட்பட மொத்த அரசாங்க வருவாயானது, 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16.7% ஆக இருந்த மட்டத்திலிருந்து, 2026 இல் 15.8% ஆகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் மறுபடியும் தொடங்கப்பட்டதன் காரணமாக, வரி வருவாயில் ஏற்பட்ட ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய (One-off surge) அதீத உயர்வு, பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதே இந்த வருவாய் வீழ்ச்சி எதிர்பார்ப்பிற்கான முக்கிய காரணம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலவிய 2022 ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் வருவாயானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8.4% என்ற மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்ததாகவும், இது உலகளவில் மிகக் குறைந்த வருவாய் மட்டங்களில் ஒன்று என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிவழிக் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் வருவாய் நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியவை வரித் தளத்தை (Tax base) விரிவுபடுத்தியுள்ளதுடன், வரி ஏய்ப்பு மற்றும் வருவாய் கசிவுகளைக் குறைப்பதற்கும் உதவியுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய வர்த்தகத் தடங்கல்கள் மற்றும் எரிசக்தி சந்தைகளில் ஏற்படக்கூடிய ஸ்திரமற்ற தன்மை ஆகியவை எதிர்கால அரசாங்க வருவாய் இலக்குகளை அடைவதில் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என நிதி அமைச்சு எச்சரித்துள்ளது
