ஜூன் 29, 2026 | பிற்பகல் 4:01
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் சுட்டிக்காட்டப்பட்ட “1 பில்லியன் அமெரிக்க டொலர் முறையான வெளிநாட்டு நாணய மோசடி” (Systemic foreign exchange fraud) குறித்து விசாரிப்பதற்காக, முதன்மையான ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நிறுவனங்களுக்கு நாடாளுமன்றத்தின் பொது நிதிக்குழு (COPF) உடனடியாக அழைப்பாணை விடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
திங்கட்கிழமை பொது நிதிக்குழுவின் (COPF) தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த குற்றச்சாட்டுகளை அவசரமாக ஆராய வேண்டிய அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு இக்குழுவுக்கு உள்ளது என்று கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதில் ஏற்படும் தாமதங்கள் அதன் மேற்பார்வைக் கடமைகளில் ஏற்படும் தோல்வியாகவே கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை சுட்டிக்காட்டிய கருணாநாயக்க, இலங்கைக்குள் எந்தவொரு பொருட்களும் இறக்குமதி செய்யப்படாத “போலி இறக்குமதிகளுக்காக” (Phantom imports) மேற்கொள்ளப்பட்ட மோசடியான தந்திப் பரிமாற்றங்கள் (Telegraphic transfers) மற்றும் முன்கூட்டிய கொடுப்பனவுகள் மூலம், 2024 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் போலி நிறுவனங்கள் (Shell companies) மூலம் வெளிநாடுகளுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது ஒரு வர்த்தகம் சார்ந்த பணச்சலவை வலைப்பின்னல் (Trade-based money laundering network) என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிப்டோகரன்சி (Cryptocurrency) ஒழுங்குமுறைப்படுத்தலின் முக்கியத்துவம் குறித்தும் COPF குழு ஆராய வேண்டும் என வலியுறுத்திய கருணாநாயக்க, ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் நாணயச் செயல்பாடுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து 2025 ஜனவரியில் தான் ஏற்கனவே இக்குழுவின் முன்னிலையில் கவலைகளை எழுப்பியிருந்ததை நினைவூட்டினார்.
இவ்வளவு பெரிய அளவிலான மோசடிப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கும் போது, ஏன் பணச்சலவை தடுப்பு (Anti-money laundering) மற்றும் நிதிசார் கண்காணிப்பு அமைப்புகள் செயல்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், மத்திய வங்கியின் மேற்பார்வை வழிமுறைகளின் செயல்திறன் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்வரும் அதிகாரிகளுக்கு COPF குழு அழைப்பாணை விடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்:
-
இலங்கை மத்திய வங்கியின் அதிபதி (Governor) மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள்.
-
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அதிபர் மற்றும் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம்.
-
இந்த பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 13 வர்த்தக வங்கிகளின் முதன்மை இணக்க அதிகாரிகள் (Chief Compliance Officers).
-
விசாரணைக்குத் தேவையெனக் கருதப்படும் ஏனைய அரச அல்லது அமலாக்க முகவர் நிறுவனங்கள்.
இந்த விசாரணையானது ஒழுங்குமுறைத் தோல்விகளை அடையாளம் காணுதல், மேற்பார்வையை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன ரீதியான குறைபாடுகளுக்குப் பொறுப்புக்கூறுவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருணாநாயக்க கூறியுள்ளார்.
பொது நிதிக்குழுவின் (COPF) அடுத்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயத்தைச் சேர்த்து, மிக விரைவில் விரிவான நிறுவன ரீதியான விசாரணையை ஆரம்பிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
