இலங்கையில் அடுத்த ஆண்டு மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
‘ட்ரீம் டெஸ்டினேஷன்’ (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட நாரஹேன்பிட்டி ரயில் நிலையத்தை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் ரயில்வே வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டங்களின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைகிறது என்று கூறினார்.
மின்சார ரயில் திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு – பாணந்துறை, கொழும்பு – மாகும்புர மற்றும் கொழும்பு – ராகம ஆகிய வழித்தடங்களில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ரயில்வே துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதோடு, உள்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகள் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உழைத்து வருவதாக ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகத் தொடர்வதாகவும், நாடு முழுவதும் உள்ள ரயில்வே உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு அரசாங்கம் பொது-தனியார் கூட்டாண்மைகளை (public-private partnerships) நாடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
