REUTERS
மத்திய கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளால் கச்சா எண்ணெய் விலை ஒரு மாத கால உச்சத்திலிருந்து குறைந்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ஆசியப் பங்குச் சந்தைகள் உயர்வைப் பதிவு செய்தன. அதேவேளையில், அழுத்தத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வர்த்தகத்தை சோதிக்கும் நிறுவனங்களின் வருவாய் முடிவுகளை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தொடரும் பின்னணியில், பலவீனமான போர்நிறுத்தத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்திலும், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிக்கப்போவதாக ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நடவடிக்கை எரிபொருள் விநியோகத்தை மேலும் பாதிக்கக்கூடும்.
அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டதால், செவ்வாய்க்கிழமை அதிகாலை வர்த்தகத்தில் ‘ப்ரென்ட்’ (Brent) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 0.38% குறைந்து 88.88 டொலராக மாறியது. முந்தைய வர்த்தக அமர்வில் ப்ரென்ட் கச்சா எண்ணெய் ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிந்தைய அதிகபட்ச விலையான 91.42 டொலரைத் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நிரந்தர ஒப்பந்தத்திற்கு வழியமைக்கும் வகையில், 10 நாள் போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை மத்தியஸ்தர்களிடமிருந்து தஹ்ரான் (ஈரான்) பெற்றுள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் திங்கள்கிழமையன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
“முதலீட்டாளர்கள் நிலைமையை இன்னும் சாதகமான கோணத்திலேயே பார்க்க முயற்சிக்கும் ஒரு விசித்திரமான சூழ்நிலை நிலவுகிறது. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற நிலைமையை அவர்கள் கண்டு அதே முடிவை எதிர்பார்ப்பதால் இவ்வாறு நடக்கிறது,” என சிட்னியிலுள்ள ATFX குளோபல் நிறுவனத்தின் தலைமைச் சந்தை உத்தி வல்லுநர் நிக் ட்விடேல் (Nick Twidale) தெரிவித்தார்.
இருப்பினும், நிலைமை கைமீறிச் சென்று பிராந்தியம் முழுவதும் மோதல் தீவிரமடையக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருவதாக ட்விடேல் சுட்டிக்காட்டினார். “எதையாவது தூண்டிவிடும் ஒரு காரணி நிகழ்ந்தால், நிலைமை சட்டென்று தீவிரமடைந்துவிடும் என உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, ஜப்பான் தவிர்ந்த ஆசிய-பசிபிக் பங்குகளுக்கான MSCI இன் பரந்த பங்குச் சந்தைச் சுட்டெண் (.MISX00000PUS), தொடர்ச்சியாக மூன்று அமர்வுகளாகச் சரிவைச் சந்தித்த பிறகு 0.25% உயர்ந்தது. ஜப்பானின் ‘நிக்கேய்’ (.N225) சுட்டெண் 1% க்கும் அதிகமாக உயர்ந்ததுடன், தென் கொரியாவின் ‘காஸ்பி’ (.KS11) சுட்டெண் கிட்டத்தட்ட 3% வரை அதிகரித்தது.
அமெரிக்கப் பங்குச்சந்தை உத்தேச எதிர்கால வர்த்தகம் (futures) சற்று உயர்வைப் பதிவு செய்த போதிலும், ஐரோப்பிய உத்தேச எதிர்கால வர்த்தகம் ஆரம்பகட்ட வர்த்தகத்தில் 0.6% சரிவைக் கண்டது.

சிப் தயாரிப்பு நிறுவனங்கள் தலைமையில் இயங்கும் உலகளாவிய பங்குகள், அதிக மதிப்பீடுகள், இலாப வளர்ச்சியின் வேகம் மற்றும் AI உள்கட்டமைப்பிற்கான முதலீடுகள் முறையான முடிவுகளைத் தருமா என்பதில் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள கவலைகள் காரணமாக சமீபத்திய வாரங்களில் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன.
AI நிறுவனங்களுக்கு வைக்கப்பட்ட வருவாய்த் தேர்வு
இரண்டாம் காலாண்டில் மிக அதிக அளவிலான இலாப எதிர்பார்ப்புகள் நிலவும் நிலையில், போரின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதையும், AI வர்த்தகத்திற்கு மேலும் வளர்ச்சிப் வாய்ப்புகள் உள்ளதா என்பதையும் கணிப்பதற்கு ‘அல்பபெட்’ (GOOGL.O – Alphabet) மற்றும் ‘இன்டெல்’ (INTC.O – Intel) உள்ளிட்ட பிற நிறுவனங்களின் இந்த வார வருவாய் முடிவுகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
ஆசியாவின் முக்கிய சிப் தயாரிப்பு நிறுவனங்களான சாம்சங் (Samsung Electronics) மற்றும் TSMC ஆகியவற்றின் வலுவான சமீபத்திய வருவாய் முடிவுகள் கூட முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கவில்லை. இது இத்துறை எதிர்கொள்ளும் சவாலை வெளிப்படுத்துகிறது.
“AI வன்பொருட்களுக்கான (hardware) தேவை மிக அதிகமாக இருப்பதுடன், நிறுவனங்களால் அதன் விநியோகத்தை ஈடுகட்ட முடியாத நிலை உள்ள போதிலும், வருவாய் குறித்த முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் மிகவும் உயர்ந்துவிட்டன. இதனால் முன்னறிவிப்புகளில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இத்துறை பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது” என ஹொங்கொங்கிலுள்ள HSBC இன் தலைமை ஆசியப் பொருளாதார நிபுணர் ஃப்ரெட் நியூமேன் (Fred Neumann) தெரிவித்தார்.
“அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் எதிர்காலக் கண்ணோட்டத்தைச் சிக்கலாக்குவதுடன், AI வன்பொருள் துறை கூட இத்தகைய பரந்த பொருளாதார மாற்றங்களிலிருந்து முழுமையாகத் தப்ப முடியாது என்பதைக் காட்டுவதால், பொருளாதாரப் பின்னணியும் சவாலானதாக மாறி வருகிறது” என்றும் நியூமேன் கூறினார்.
அமெரிக்க-ஈரான் பதற்றம் தீவிரமடைந்து வருவது பணவீக்கம் குறித்த கவலைகளை மீண்டும் கொண்டுவந்துள்ள தோடு, அரசுப் பத்திரங்களின் (Treasury) வட்டி வருவாயையும் (yields) உயர்த்தியுள்ளது. ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நகரும் 2 ஆண்டு கால பத்திர வட்டி வருவாய், திங்கள்கிழமையன்று 4 அடிப்படைப் புள்ளிகளைப் பெற்ற பிறகு, ஆசிய வர்த்தக நேரத்தின் போது 4.206% ஆக இருந்தது.
