புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிரிவு 301’ (Section 301) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இலங்கையிலிருந்தான இறக்குமதிகளுக்கு 10% வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (EASL) தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளது.
முன்னர் முன்மொழியப்பட்ட வரி வீதங்கள் மிகவும் அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள EASL, தற்போதைய தீர்மானம் நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான ஒரு நிலையே எனக் கருதுகிறது. இத் தீர்மானமானது ஒரு முக்கிய ஏற்றுமதிச் சந்தையில் இலங்கைப் பொருட்களின் போட்டித்தன்மையைத் தக்கவைக்க உதவும் என்றும் சங்கம் நம்புகிறது.
இந்த முடிவானது பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட பிராந்தியத்தின் முக்கிய போட்டியாளர்களுக்கு இணையான நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வாங்கும் தீர்மானங்கள் மிகக் குறைந்த செலவு வித்தியாசங்களால் தீர்மானிக்கப்படும் கடுமையான போட்டி நிறைந்த சர்வதேச சந்தைகளில், இதுபோன்ற சம அளவிலான வரியைப் பேணுவது அத்தியாவசியமானது என்றும் அது வலியுறுத்தியது.
குறிப்பாக, லாப வரம்பு குறைவாக உள்ள ஆடைத் துறையில் (Apparel sector), சர்வதேச கொள்வனவாளர்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்தான இறக்குமதிச் செலவுகளை மிக நுணுக்கமாக மதிப்பீடு செய்வதால், வெறும் 2.5 சதவீதப் புள்ளி வரி வித்தியாசம் கூட இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை பெருமளவில் பாதிக்கும்.
இந்த புதிய தீர்மானம் மிக முக்கிய ஸ்திரத்தன்மையை வழங்குவதுடன், இலங்கை ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க சந்தையில் தொடர்ந்து போட்டியிடுவதை உறுதி செய்கிறது.
மேலும், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கு இத் தருணம் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளதாக EASL சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச வர்த்தகக் கொள்கைகளின் மாறிவரும் தன்மை ஏற்றுமதியாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கக்கூடும் என்பதால், முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அத்தியாவசியமாகும்.
இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் அதிக நிச்சயத்தன்மை, சிறந்த சந்தை அணுகல் மற்றும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை எட்டும் நோக்கில், அமெரிக்காவுடன் ஒரு முழுமையான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (Bilateral trade agreement) தீவிரமாக முன்னெடுக்குமாறு இலங்கையை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.