நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் வேறு இருவருக்கும் எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இடம்பெற்றுவந்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன.
குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனை நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டவேளை இதனை தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேலும் தெரிவித்துள்ளதாவது
விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால் மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் எயார்பஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்தவேளை இடம்பெற்றதாக கூறப்படும் இந்த நிதிமுறைகேடுகள் தொடர்பில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் பொருத்தமான மேல்நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மேலும் இவ்வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி,மூன்றாவது சந்தேகநபரான சமிந்திர ராஜபக்ச,ஆகியோரை கைதுசெய்வதற்காக சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்ட அமுலாக்கல் அமைப்புகள் ஊடாக இடம்பெறுகின்றன.
நாமல்ராஜபக்சவிற்கு இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சமீபத்தில் பிணை வழங்கப்பட்ட போதிலும் ஊழல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்கில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளார்.
(ரி)