இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற யானைகளில் ஒன்றான கவந்திஸ்ஸ துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் யானை மீது யார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது யார் என்பது குறித்தும் அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனரா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
யானையின் இறப்புக்கான காரணத்தை கண்டறிவதற்காக அதிகாரிகள் உடற்கூற்றாய்வுக்கு தயாராகிவரும் அதேவேளை யானை உயிரிழந்தமை குறித்து சுயாதீன விசாரணையொன்று அவசியம் என சூழல்பாதுகாப்பு செயற்பட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கவந்திஸவின் சடலத்தை சுயாதீன பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சூழலியாளர் நயன்க ரன்வல துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது யார் என்பதை கண்டுபிடிப்பதற்கான விசாரணையும் அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யானைஉயிரிழப்பதற்கு முன்னர் அதற்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிலவாரங்களாக நோய்பாதிப்பினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்த கவந்திஸ வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.வலதுகாலில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு காயத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே யானை உயிரிழந்துள்ளது.
எனினும் துப்பாக்கி பிரயோகம் குறித்த விடயங்கள் தொடர்ந்தும் மர்மமாகவே உள்ளன.எந்த பகுதியில் வைத்து யானை தாக்கப்பட்டது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டது யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
கவந்திஸவின் காலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் உள்ளதை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
துப்பாக்கி சூடு குறித்து விசாரணை இடம்பெறுவதாக அவ்வேளை சுற்றாடல் விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்திருந்தார்.வனவிலங்குதுறையினர் யானையின் நடமாட்டத்தில் மாற்றங்களை அவதானித்தனர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
யானை மனித மோதல்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் விவசாயிகளிடம் துப்பாக்கிகள் காணப்படுவது குறித்து கரிசனைகளும் வெளியாகியிருந்தன.யானைகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிடாமல் அரசியல்வாதிகள் சிலர் தடுக்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன