மட்டக்களப்பு மயிலத்தடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை அவசரமாக சந்திப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மட்டக்களப்பு மாவட்டத்தில் தீர்க்கப்படாமலிருக்கின்ற மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்காக தங்களின் அவசர சந்திப்பை கோரி இந்தகடிதத்தை எழுதுகின்றோம்.
இந்த மேய்ச்சல் நிலங்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவது மற்றும் அங்கு செல்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகளையும் கடுமையாக பாதித்துள்ளன.
இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை திருப்திகரமான தீர்வுகள் எட்டப்படவில்லை.
எனவே ஜனாதிபதியின் தலையீடு அவசரமாக தேவைப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை தமிழரசுகட்சி குழுவினர் உடனடியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிலையான தீர்வு குறித்து ஆராய்வதற்கான சந்திப்பொன்றிற்கான நேரத்தை கூடியவரை விரைவாக ஒதுக்கிதருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.