கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப், இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நில ஆக்கிரமிப்பு மற்றும் நீதி மறுக்கப்படுவது தொடர்பில் கனேடிய அதிகாரிகளுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி., சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீனமான தடயவியல் விசாரணை (Forensic Investigation) நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்தும் கனேடிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 171 ஏக்கர் பூர்வீகக் காணிகளையும், யாழ். வலிகாமம் வடக்கில் 2,117 ஏக்கர் காணிகளையும் உடனடியாக உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தையிட்டி காணிப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மறுக்கப்படுவதுடன், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தையும் சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். போர் முடிவடைந்து ஆண்டுகள் பல கடந்தும் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற முடியாத சூழல் தொடர்வதையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கேள்விகள் தீர்க்கப்படாமல் உள்ளதையும் எடுத்துரைத்த தமிழ் அரசுக் கட்சியின் குழுவினர், சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாக கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இச்சந்திப்பின் நிறைவில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செம்மணிப் படுகொலை, கேப்பாப்பிலவு மற்றும் வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புகள் தொடர்பான விரிவான ஆவணத் தொகுப்புகள் கனேடிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன