மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையின் உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (PMI) 60.9 என்ற உயரிய மதிப்பைப் பெற்றுள்ளது. மாதத்தின் தொடக்கத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக சில தடங்கல்கள் ஏற்பட்ட போதிலும், பண்டிகைக் காலத் தேவையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளின்படி, உற்பத்தியின் அனைத்து துணைச் சுட்டெண்களும் இந்த வளர்ச்சிக்கு சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளன. குறிப்பாக, உணவு மற்றும் பானங்கள் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக ‘புதிய கட்டளைகள்’ (New Orders) மற்றும் ‘உற்பத்தி’ (Production) ஆகிய சுட்டெண்கள் அதிகரித்துள்ளன.
அதேபோல், வேலைவாய்ப்பு மற்றும் கொள்வனவு இருப்பு ஆகிய சுட்டெண்களும் மேல்நோக்கிய போக்கைக் காட்டின. இருப்பினும், மூலப்பொருட்களுக்கான அதிகரித்த தேவை மற்றும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட விநியோகத் தடங்கல்கள் காரணமாக, ‘விநியோகஸ்தர்களின் விநியோக நேரம்’ (Suppliers’ Delivery Time) மேலும் தாமதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
