
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பாரத் மண்டபத்தில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முக்கிய அரங்குகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பல்வேறு நிறுவனங்களின் ஏஐ நிபுணர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி பாரத் மண்டபத்தில் திங்கள் கிழமை தொடங்கிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்களை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிநாட்டினர் ரூ.25,000-ஐ “யுபிஐ ஒரே உலகம்” வாலட்டில் வரவு வைத்து இந்தியாவில் பொருட்கள் வாங்க முடியும். யுபிஐ கியூஆர் கோடு நடைமுறை மூலம் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். தேவைப்பட்டால் கூடுதலாக ரூ.25,000-ஐ வாலட்டில் வரவு வைக்கலாம். ஆனால் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே வாலட்டில் வரவு வைக்க முடியும். இந்தியாவில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பும்போது வெளிநாட்டினரின் வாலட்டில் மீதமிருக்கும் பணம் அவர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
இதுகுறித்து என்பிசிஐ வட்டாரங்கள் கூறும்போது, “இந்தியாவின் யுபிஐ பணப் பரிமாற்ற நடைமுறைக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சிங்கப்பூர், நேபாளம், பூடான், மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சைப்ரஸ், மலேசியா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் யுபிஐ சேவையை விரைவில் தொடங்க உள்ளன” என்று தெரிவித்தன
