தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
இலங்கை அரசு, தமிழர் நிலங்களை இன்றும் விடுவிக்க மறுப்பது ஏன்?
இந்திய அரசும் தமிழ்நாடு அரசும், ஈழத் தமிழர்களுக்கு துணை நிற்க முடியாதா?
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான ஆயுதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், அந்தப் பேரவலத்திற்கு முன்னதாகத் தமிழர்களின் வீடுகளாகவும் விளைநிலங்களாகவும் வாழ்வாதாரமாகவும் விளங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், இன்றளவும் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிடியிலேயே நீடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
2017-ஆம் ஆண்டிலேயே வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 30,000 ஏக்கர் தனியார் நிலங்கள் பாதுகாப்புப் படைகளின் வசமிருப்பதாக இலங்கை அரசே ஒப்புக்கொண்டது. குறிப்பாக, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்பட்டதை பல்வேறு கள ஆய்வுகள் பதிவு செய்துள்ளன.
2026-ஆம் ஆண்டிலும் “பாதுகாப்புக்குத் தேவையில்லாத நிலங்களை விடுவிக்க ஆய்வு செய்கிறோம்” என இலங்கை அரசு கூறுவது, இத்தனை ஆண்டுகளாய் நில மீட்பு முழுமையடையவில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது.
ஆயுத மோதல்கள் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?
தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் எந்த நிலம் தேவை, எது தேவையில்லை என்ற வெள்ளை அறிக்கையை இதுவரை வெளிப்படையாக வெளியிடாதது ஏன்?
தேவைப்படாத நிலங்களை விடுவிப்பதில் உள்ள தயக்கம், சொந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர் இனப்பாகுபாட்டையே காட்டுகிறது. இதற்கு இலங்கை அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.
நிலத்தை இழப்பது என்பது ஒரு குடும்பத்தின் தலைமுறை அடையாளம், தொழில், பொருளாதாரம் மற்றும் சமூக உறவுகள் அனைத்தையும் இழப்பதாகும். மக்களின் விளைநிலங்களை இராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்கும் செயலாகும்.
வடக்கு கிழக்கில் இராணுவப் பிடியிலுள்ள தமிழர்களின் தனியார் நிலங்கள் குறித்து விரிவான நிலவர அறிக்கையை இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோர வேண்டும். நிலங்களை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க இலங்கை அரசைத் தூதரக ரீதியாக வலியுறுத்துமாறும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்சிக்குத் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறும் ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
இந்தியா–இலங்கை இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் நிலவுரிமை, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை முதன்மை நிபந்தனையாக முன்வைக்க வேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களின் பட்டியலைப் பெற்று, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவை மக்களிடம் ஒப்படைக்கப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.
தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படைச் சொத்துரிமையைக் காலவரையின்றிப் பறிக்க முடியாது. பாதுகாப்புக்குத் தொடர்பற்ற அனைத்து நிலங்களையும் தாமதமின்றி விடுவித்து, ஈழத்தமிழர்களின் நில உரிமை, வாழ்வாதாரம் மற்றும் மனித உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உறுதியான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.