ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக இராணுவபுலனாய்வாளர்கள் சிலருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

நயனா செனவிரத்தனஇநளின் ஹேவாசம் லக்மலி ஹேவாவசம் ஆகிய மூவரை கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன் போது முறைப்பாட்டாளர்களின் சாட்சியாக பெயரிடப்பட்டிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ்சாலே சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரரணக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ்சாலே நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு அமைய சாட்சியமளிப்பதற்காக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சுரேஸ்சாலேயிடம் விபரங்களை கேட்டறிதல்
இதன் போது முறைப்பாட்டாளர் தரப்புக்காக முன்னிலையான பிரதிசொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா சுரேஸ்சாலேயிடம் நீங்கள் இராணுவபுலனாய்வு பணியகத்தில் எந்த காலப்பகுதியி;ல் பணியாற்றினீர்கள் என கேள்வி எழுப்பினார்.
2012 முதல் 2016 வரை தான் அந்த காலப்பகுதியில் பணியாற்றியதாக சாட்சி பதிலளித்தார்.
அதன் பின்னர் சாட்சியிடம் கேள்வி எழுப்பிய பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கிரித்தலே இராணுவமுகாமில் செயற்பட்ட ஆயுதமேந்திய புலனாய்வு படைப்பிரிவு குறித்து உங்களுக்கு தெரியுமா என கேட்டார்.
மூன்று நான்கு தடவை அங்கு சென்றுள்ளேன் என சுரேஸ் சாலே பதிலளித்தார்.
பிரதிசொலிசிட்டர் ஜெனரல் எழுப்பிய கேள்விகளுக்கு சுரேஸ் சாலே இவ்வாறு பதிலளித்தார்.
எனது 38 வருட கால சேவைக்காலத்தில் நான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துடன் (CID) பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். பல வாக்குமூலங்களை வழங்கியிருக்கிறேன். பல ஆவணங்களைக் கையளித்திருக்கிறேன். இச்சம்பவம் தொடர்பாக இராணுவ விசாரணையும் ஒன்று நடத்தப்பட்டது. அது தொடர்பான தகவல்களும் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், இச்சம்பவம் நடந்து இப்போது 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. எனவே, இச்சம்பவத்திற்கு வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களைச் சரியாகப் பார்க்காமல் எதையும் கூற முடியாது” என்று குறிப்பிட்டார்.
அதன் பின்னர் சுரேஷ் சலேயின் சாட்சியப் பதிவு நிறைவடைந்ததுடன், பின்னர் அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
.