ஞானசாரதேரரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு எதிராக கொழும்பில் இன்று பொதுமக்கள் பேரணியொன்று இடம்பெற்றது.
பொதுமக்கள் ஆணை என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டதுடன் சட்டம் அனைத்து பொதுமக்களுக்கும் சமனானது என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நாட்டின் நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் குறித்து தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்தமதகுருமார் உட்பட பல மதத்தலைவர்கள் சிவில் சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
திருடர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதை தடுப்பதற்கானமுயற்சிகள் இடம்பெறுகின்றன, ஊழல்வாதிகளையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் தோற்கடிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து வெளியிட்டதுடன்,அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமனான விதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் எவருக்கும் விசேட சலுகைகளை வழங்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர்.
நாட்டை சீரழித்தவர்கள் தற்போதைய சட்டநடவடிக்கைகளை தடம்புரளச்செய்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்ககூடாது எனவும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.