ஹோமகம பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் குறித்து ஒரு மாதகாலத்திற்கு முன்னரே அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாக பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் இறுதிசடங்களில் கலந்துகொண்ட பௌத்தமதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஹோமாகம பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஒருவருக்கு தான் தெரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள பௌத்தமதகுரு இந்த விடயத்திற்கு தீர்வை காணுமாறு தான் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிகழ்வின் போது ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார் ஆனால் அதிகாரிகள் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவரிடம் தெரிவித்தனர் என பௌத்தமதகுரு குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் நண்பர் ஒருவரும் இவ்வாறான சூழ்நிலையில் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டார்,ஹோமாக பொலிஸ் நிலையத்தை சேர்ந்த குருசிங்க என்ற பொலிஸ் உத்தியோகத்தரால் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை பல சம்பவங்கள் தொடர்பில் தாக்கப்பட்டனர் என பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை பேணுவதே பொலிஸாரின் கடமை தாக்குவதல்ல என தெரிவித்துள்ள பௌத்தமதகுரு பொலிஸ் காவலில் மரணம் நிகழ்வதைதடுக்காதமைக்கு அரசாங்கமும் பொலிஸாரும் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
பொலிஸ்காவலில் உயிரிழக்கும் முதல் நபர் ஹர்ச குமாரவில்லை இறுதி நபரும் அவராகயிருக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள பௌத்தமதகுரு வெலிக்கடை பொலிஸில் பதுளை இளைஞன் உயிரிழந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களின் கவனம் இல்லாவிட்டால் இந்த இளைஞன் நோய்காரணமாக உயிரிழந்தார் என முடித்திருப்பார்கள் என தெரிவித்துள்ள மதகுரு சிறிய இலஞ்சத்திற்காக சில பொலிஸார் தங்கள் நேர்மையை விட்டுக்கொடுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
பத்தாயிரம் இருபதினாயிரத்திற்கு சாராயத்தை விற்கும் பொலிஸார் இந்த நாட்டில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.