ஹோமாகம பொலிஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை 29 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற பொலிஸ் அதிகாரங்களின் ஆபத்து, முறையான சட்ட நடவடிக்கைகளை புறக்கணித்தல்,மற்றும் அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றின் ஆபத்தினை இது மீண்டும் ஒரு முறை கடுமையாக நினைவுபடுத்தியுள்ளது என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் உண்மைகளை கண்டறிந்து நீதியை உறுதி செய்துகொள்வதற்காக விரைவான சுதந்திரமான வெளிப்படையான நடுநிலையான விசாரணையொன்றை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் குறித்த சட்டமூலம் ஆகியவை தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த கவலைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் குறைந்தபட்ச மனித உரிமை பாதுகாப்புடன் பொலிஸாருக்கு மேலும் பரந்துபட்ட அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் வழங்கும்.இதன் காரணமாக மேலும் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் இடம்பெறலாம் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.