சர்ச்சைக்குரிய கிரிஷ் நிலக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கையெழுத்து அடங்கிய ஆவணம் ஒன்று பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
கொழும்பு முதன்மை நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் வெள்ளிக்கிழமை (06) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
கிரிஷ் வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய சட்ட நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கொழும்பு பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் காணி ஆணையாளர் உள்ளிட்ட பலரிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய உதவிப் பணிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் உள்ள நிலத்தை இந்திய கிரிஷ் நிறுவனத்திற்குக் கையளித்தது தொடர்பாக நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற புலனாய்வாளர்கள் உத்தேசித்துள்ளனர்.
நாமால் ராஜபக்ஷவினுடையது எனக் கூறப்படும் கையெழுத்து அடங்கிய மூல ஆவணத்தைப் ) பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் அதைக் கோரியுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
அந்த மூல ஆவணம் தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற இலக்கம் 7 இல் உள்ள வழக்குக் கோப்பில் உள்ளது.
பரிசோதனைக்காக அந்த ஆவணத்தை விடுவிக்குமாறு மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரியது.
இருப்பினும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில் இக்கோரிக்கை சேர்க்கப்படவில்லை என அவதானித்த நீதவான்இ உரிய ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
புலனாய்வு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நவம்பர் 20 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை அதே திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஜானகி சிறிவர்தனவை அன்றைய தினம் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
முன்மொழியப்பட்ட அபிவிருத்தி திட்டத்திற்காக டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்க நிலத்தை இந்திய கிரிஷ் நிறுவனத்திற்கு மாற்றியமைத்தது தொடர்பாக 70 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இலஞ்சம் பெற்றமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாமலும் சிறிவர்தனவும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.