நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணியை முன்னிலைப்படுத்த பசில் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது நீதவான் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல், அவருக்குப் பதிலாகச் சட்டத்தரணி ஒருவரை முன்னிலைப்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை மாத்தறை நீதவான் சதுர திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர், சட்டத்தரணி ஊடாக திரு. ராஜபக்ஷ விடுத்த இந்தக் கோரிக்கைக்கக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தார். இக்கோரிக்கையை உறுதிப்படுத்துவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் போதுமானவை அல்ல எனக் கூறி அதனை நிராகரித்த நீதவான், பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக திறந்த பிடியாணை (open warrant) பிறப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

மாத்தறை எலியகந்த பகுதியில் உள்ள ‘பிரவுன்ஸ் ஹில்’ (Brown’s Hill) நிலத்தைக் கொள்முதல் செய்தமை தொடர்பான விசாரணை குறித்து எஃப்.சி.ஐ.டி (FCID) தாக்கல் செய்த முறைப்பாட்டில் நான்கு சந்தேகநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பசில் ராஜபக்ஷ, அவரது அண்ணி அயோமா கலாப்பதி, மற்றும் மைத்துனர்களான முதித்த ஜயகொடி, திஸ்ஸ கலாப்பதி ஆகியோரே எஃப்.சி.ஐ.டியினால் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

முதித்த ஜயகொடியும் திஸ்ஸ கலாப்பதியும் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், அயோமா கலாப்பதி ஏப்ரல் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் (Notice) அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பில் பசில் ராஜபக்ஷவோ அல்லது அயோமா கலாப்பதியோ இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.. ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவிலும் கலாப்பதி கனடாவிலும் வசித்து வருகின்றனர்.

 கலாபதிக்கு அனுப்பப்படும் அறிவித்தலை வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஊடாக நடைமுறைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியில் (affidavit), தான் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட தூர விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். மேலும், காணொளித் தொடர்பு (video link) மூலமாகச் சாட்சியமளிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

சந்தேகநபர் தனது கோரிக்கையை அனுமதிக்கும் அளவிலான எந்தவொரு விதிவிலக்கான சூழ்நிலையிலும் தற்போது இருக்கிறார் என்பதை நிருபிப்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்று வாதிட்டு, திரு. ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அரசுத் சட்டத்தரணி கலாண கொத்தலாவல ஆட்சேபனை தெரிவித்தார்.

குறித்த சொத்து தொடர்பான உறுதியில் அயோமா கலாப்பதியின் பெயர் உரிமையாளராகப் பதிவிடப்பட்டுள்ளதாகவும், அந்த நிலம் 50 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியதுடன், இது குறித்து அவரை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறும் கோரியது.

குறித்த சொத்தை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டனர் என்பதை வெளிப்படுத்தத் தவறியமைக்காக, பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, கடந்த மே 22 ஆம் திகதி பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான பிடியாணை முதன்முதலில் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

bec5d639-8910-46b7-8d9c-44bb88e4bce9
போலந்தின் கிராக்கோவ் நகரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஐவர் பலி
anura may 26
பொதுமக்களுடன் கலந்துரையாடாமல் புதிய சட்டங்களை நிறைவேற்றமாட்டோம் - ஜனாதிபதி
Pubudu-Jayagoda
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசு மௌனம் - மதகுருமாருடன் மாத்திரம் பேசுவதில் பலனில்லை – முன்னிலை சோசலி கட்சி
batti land
நீதிமன்றங்களையும் அரச திணைக்களங்களையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் நில உரிமைகளைப் பறிக்க அநுர அரசாங்கம் முயற்சிக்கிறதா?
bribery commission
பிரதியமைச்சர் சுனில் வடகல மற்றும் முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரின் சொத்துக்கள் குறித்து முழுமையான விசாரணை: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானம்
namal courts
கிரிஷ் ஒப்பந்த விசாரணை: நாமல் ராஜபக்ஷவின் கையெழுத்து பரிசோதனைக்கு சமர்ப்பிப்பு
Malcolm-Cardinal-Ranjith
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கத்தோலிக்கத் திருச்சபை ஆராய்ந்து வருவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு
india-visa_1467611948m
இலங்கைத் தமிழர்கள் உட்பட குறிப்பிட்ட சில வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது
SAJITH X
இலங்கையே, நமது பெயரில் பாராளுமன்றம் என்ன செய்ய அனுமதிக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
court-judge-hammer-gavel-696x398
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உத்தரவிட்ட கம்பஹா நீதவான் இடமாற்றம்