.முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை திருத்துவது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை முன்ணணி சோசலிசக் கட்சி (FSP) சவாலுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அவர் சுட்டிக்காட்டிய மாற்றங்கள் வெறும் மேலோட்டமானவை என்றும், இச்சட்டமூலத்தால் ஜனநாயக உரிமைகளுக்கும் சிவில் சுதந்திரத்திற்கும் ஏற்படும் அடிப்படை அச்சுறுத்தல்களுக்கு அவை தீர்வளிக்கத் தவறிவிட்டன என்றும் வாதிட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய எஃப்.எஸ்.பி.யின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, வியாழக்கிழமை (05) அலரி மாளிகையில் மதத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைகள் அமைப்புகள், தொழில்வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் எழுப்பப்பட்ட பரந்த கவலைகளைப் புறக்கணித்து, மூன்று குறிப்பிட்ட விதிகள் மீது மட்டுமே கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
முன்மொழியப்பட்ட சட்டமூலம் அடக்குமுறையற்றது என்றும் சர்வதேச தரத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி விவரித்ததுடன், அதனை எதிர்ப்பவர்கள் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் குற்றவாளிகளின் நலன்களுக்காகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டம் உட்பட, பொதுமக்கள் மத்தியில் எழுந்த பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து, அரசாங்கம் தனது நிலையை மறுபரிசீலனை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக ஜயகொட தெரிவித்தார்.
“முன்னர் இத்தகைய சொல்லாடல்களுடன் இச்சட்டமூலத்தைப் பாதுகாத்த ஒரு நிர்வாகம், இந்த அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக முழுச் சமூகமும் குரல் கொடுத்ததாலேயே இந்தளவுக்கு நெகிழ்வுத்தன்மையை எட்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.
ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று விடயங்களை அடையாளம் காட்டிய ஜயகொட, முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அடிப்படைப் பிரச்சினைகளை ஏன் தீர்க்காது என்பதையும் விளக்கினார்.
1. தடுத்து வைப்பு காலத்தைக் குறைத்தல்: காவல்துறையின் தடுத்து வைப்பு காலத்தை 72 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாகக் குறைக்கும் ஜனாதிபதியின் முன்மொழிவு, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த அதிகாரங்களுக்குத் தீர்வளிக்கத் தவறிவிட்டது என்று எஃப்.எஸ்.பி.யின் முதல் கவலையாக ஜயகொட சுட்டிக்காட்டினார்.
குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுதல், நீதித்துறை மறுஆய்வு இன்றி ஒரு வருடம் வரை நீடிக்கக்கூடிய தடுத்து வைப்பு உத்தரவுகள் மற்றும் போதிய நீதித்துறை மேற்பார்வை இல்லாத தடுத்து வைப்பு வசதிகளுக்கு இச்சட்டமூலம் வழிவகுக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“பிரச்சனை மணித்தியாலங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, இச்சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த, எல்லையற்ற அதிகாரங்களே ஆகும்,” என்று அவர் கூறினார்.
மேலும், நீதவான்களை வெறும் ‘ரப்பர் ஸ்டாம்புகளாக’ மாற்றி, நீதித்துறை அதிகாரத்தை நிறைவேற்றுத்துறைக்கு மாற்றும் விதிகளையும் அவர் விமர்சித்தார்.
“தெரு வியாபாரியைப் போல மணித்தியாலங்களின் எண்ணிக்கை குறித்து பேரம் பேசாதீர்கள். இந்தச் சட்டங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளுடன் தொடர்புடையவை,” என்று ஜயகொட கூறினார்.
2. பச்சை குத்துதல் (Tattoos) பற்றிய விதிமுறை: உடலில் பச்சை குத்துவதன் (tattoos) மூலம் குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காணும் விதியை மாற்றப்போவதாக ஜனாதிபதி திசாநாயக்க சுட்டிக்காட்டியதற்குப் பதிலளித்த ஜயகொட, இந்தப் பிரச்சினை பச்சை குத்துவதற்கு அப்பால் நீண்ட தூரம் செல்வதாகக் கூறினார்.
குற்றவியல் நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பதற்கான சான்றுகளை விட, ஒருவரின் உடலமைப்பு மற்றும் சமூகத் தொடர்புகளின் அடிப்படையில் தனிநபர்களைச் சந்தேகநபர்களாக மாற்ற இச்சட்டம் வழிவகுக்கும் என்று அவர் வாதிட்டார்.
“பச்சை குத்தும் விதி என்பது இந்தச் சட்டத்தின் நகைச்சுவையான தன்மையின் ஒரு அடையாளம் மட்டுமே,” என்று கூறிய அவர், குற்றவியல் பொறுப்பு என்பது ஒரு குற்றத்தில் ஒரு தனிநபரின் ஈடுபாட்டின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற அடிப்படைச் சட்டக் கோட்பாட்டை இச்சட்டம் சீர்குலைக்கிறது என்றும் கூறினார்.
3. ஏனைய சட்ட விதிகளின் கீழ் உள்ள குற்றங்கள்: (Excise) கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களை நீக்குவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவைக் கேள்விக்குட்படுத்திய ஜயகொட, சூதாட்டச் சட்டம், வன மற்றும் தாவரக் கட்டளைச் சட்டம், வனவிலங்கு கட்டளைச் சட்டம் மற்றும் தொல்பொருள் சட்டம் உள்ளிட்ட பிற சட்டங்களின் கீழ் உள்ள குற்றங்கள் ஏன் மறுபரிசீலனை செய்யப்படவில்லை என்றும் வினவினார்.
அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிப்பது தொடர்பான விதிகளின் மூலம், போராட்டத்தில் ஈடுபடும் மக்களைக் கூட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக வகைப்படுத்த வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.
பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்கள், தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் மின்னணு சாதன அணுகல், மற்றும் சந்தேகத்திற்குரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடனான கடந்தகால தொடர்புகளைக் குற்றமயமாக்குதல் தொடர்பான விதிகளுக்கு ஜனாதிபதி ஏன் தீர்வு காணவில்லை என்றும் ஜயகொட மேலும் கேள்வி எழுப்பினார்.
அரசு பயங்கரவாதச் சட்டம் (PSTA): முன்மொழியப்பட்டுள்ள அரசு பயங்கரவாதச் சட்டம் (PSTA) குறித்தும் அரசாங்கம் மௌனம் காப்பதாக விமர்சித்த அவர், திருத்தங்கள் மூலம் அதனைச் சரியாகத் திருத்த முடியாது என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதுடன் சேர்த்து அதனையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வாதிட்டார்.
பௌத்த பிக்குகள், கத்தோலிக்க குருமார்கள் மற்றும் இந்து, முஸ்லிம் மதகுருமார்களுடன் மட்டுமே கலந்துரையாடல்களை வரம்படுத்துவதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுடன் இணைந்து செயல்படுமாறு ஜயகொட ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டார்.
“மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரியுங்கள். பிரதேச செயலாளர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அலரி மாளிகையில் வலுக்கட்டாயமாகத் திரட்டப்பட்ட கூட்டத்துடன் இந்த விடயங்களைப் விவாதிக்கக் கூடாது. மாறாக, தொழிலாளர் இயக்கம், மாணவர் இயக்கம், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய சட்டத்தரணிகள் உட்பட தொழில்வல்லுநர்களைச் சந்தித்துப் பேசுங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.
கொழும்பு மத்திய பகுதி, வனத்தமுல்ல, மாளிகாவத்தை, மோதரை, மட்டக்குளி மற்றும் தெமட்டகொட போன்ற பகுதிகளில் உள்ள தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வாக்களித்த நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் இளைஞர்களுடனும், சுதந்திர வர்த்தக வலயங்களின் பெண் தொழிலாளர்களுடனும் அரசாங்கம் இது குறித்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என ஜகொட யோசனை தெரிவித்தார்.
“உங்கள் சொந்த வரலாற்றுக்கும் உங்களைத் தாங்கிப்பிடித்த சக்திகளுக்கும் முதுகைக் காட்டுவதற்குப் பதிலாக, தவறு நடக்கும் போது அதை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ளும் அளவுக்கு அடக்கத்துடன் இருங்கள்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.