கொழும்பு, நவம்பர் 24:
அமெரிக்காவிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா (Aruni Ranaraja) நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தில் நேற்று (23) உரையாற்றியபோதே அமைச்சர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜதந்திர நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
“தற்போது ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான தூதுவர் பதவிகள் வெற்றிடமாக உள்ளன. வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவிற்குப் பெண் தூதுவர் ஒருவரை நாம் நியமிக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றும் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக அனுப்பி வைக்கப்படவுள்ளார்” என அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இலங்கையின் இராஜதந்திரப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நியமனங்களின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கமைய, வெளிவிவகார அமைச்சின் பிரதான மரபுசார் அதிகாரி (Chief Protocol Officer) ரோஹண அம்பகொல்ல (Rohana Ambagolla), கனடாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி கனடா பயணமாகவுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சீனாவிற்கான இலங்கைத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இராஜதந்திரி, எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அவரது நியமனத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முக்கிய தலைநகரங்களில் நிலவும் இராஜதந்திர வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நாட்டின் இராஜதந்திர வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவிற்குப் பெண் தூதுவர் ஒருவர் நியமிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.