மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தடுக்கப்பட்டமை ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அரசாங்கத்தின் பலவீனமான மற்றும் பேரம்பேசும் வெளிவிவகாரக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே, இம்ரான் கானின் விடுதலையைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா முன்வைத்த பிரேரணை மீதான விவாதத்திற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தமை குறித்து ஹக்கீம் தனது கரிசனையை வெளியிட்டார்.
பாகிஸ்தானுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்திலேயே குறித்த விவாதம் தடுக்கப்பட்டதாக அஜித் பி. பெரேரா தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கையுடன் இருதரப்பு உறவுகளைப் பேணும் நாடுகளுடன் இராஜதந்திரப் பதற்றங்களை ஏற்படுத்தக்கூடிய விடயங்களைக் கையில் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்குவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்திய ரவூப் ஹக்கீம், பாகிஸ்தான் எப்போதும் இலங்கையின் நீண்டகால நண்பனாக இருந்துள்ளதுடன், இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைப் பாதித்த கட்டாய ஜனாஸா எரிப்புக் கொள்கைக்கு எதிராகப் பாகிஸ்தான் தலையிட்டமையை அவர் நினைவுகூர்ந்தார். அக்காலகட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டாய ஜனாஸா எரிப்புக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முக்கிய பங்காற்றியதாக ஹக்கீம் குறிப்பிட்டார்.
இம்ரான் கான் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது விடுத்த தலையீட்டினாலேயே, அன்றைய அரசாங்கம் அந்தப் பாரபட்சமான கொள்கையைத் திரும்பப் பெற்று கொவிட்-19 உயிரிழப்புகளை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியது எனத் தெரிவித்த ஹக்கீம், அவரது இந்தப் பங்களிப்பை இலங்கை மறந்துவிடக் கூடாது என வலியுறுத்தினார்.
“இவ்விடயம் குறித்து நாம் ஏன் சபையில் விவாதிக்க முடியாது? நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், மற்றுமொரு நாட்டுடன் நட்புறவைப் பேணுவது என்பது அங்கு இடம்பெறும் அநீதிகளைச் சுட்டிக்காட்டுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட ஆட்சியைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை எனக் கூறிய ஹக்கீம், வெளிவிவகாரக் கொள்கையானது பேரம்பேசல்களின் அடிப்படையில் அன்றி கொள்கைகளின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பலஸ்தீன விவகாரம் உள்ளிட்ட பல சர்வதேசப் பிரச்சினைகளில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விமர்சித்த அவர், உள்நாட்டில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் சர்வதேச அரங்குகளில் வெளியிடும் ஆதரவு அறிக்கைகள் மட்டும் போதாது எனக் குறிப்பிட்டார். இவ்விடயத்தில் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் அணுகுமுறையைச் சுட்டிக்காட்டிய ஹக்கீம், அவருடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு உள்ள நட்புறவைக் கருத்திற்கொண்டு இவ்விவகாரத்தில் ஜனாதிபதி மேலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சுடன் சேர்த்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளையும் அமைச்சர் விஜித ஹேரத் நிர்வகித்து வருவதால், மூன்று துறைகளின் பணிச்சுமையையும் ஒரு செயலாளரால் மாத்திரம் கையாள்வது கடினம் என ஹக்கீம் சுட்டிக்காட்டினார். எனவே, அமைச்சருக்கு உதவியாகக் குறைந்தபட்சம் இரண்டு மேலதிக செயலாளர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். தனது இந்தப் பரிந்துரை சிரேஷ்ட வெளிவிவகார சேவை அதிகாரியான தற்போதைய அமைச்சின் செயலாளரை விமர்சிக்கும் நோக்கிலானது அல்ல எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.