மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள் மூடப்படுவது இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதன் விளைவாக 26,000 பேர் வேலையிழப்பார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
குப்பியவத்தையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சில ஆடைத் தொழிற்சாலைகள் இந்தியாவுக்கு மாற்றப்படுவது உள்ளூர் கைத்தொழில் துறைக்கு மற்றுமொரு பின்னடைவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எனது தந்தை மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தின் ஒரு அங்கமாகவே மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உருவானது. விக்டோரியாஸ் சீக்ரெட் (Victoria’s Secret), அடிடாஸ் (Adidas) மற்றும் கால்வின் கிளைன் (Calvin Klein) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களை மாஸ் ஹோல்டிங்ஸ் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து வந்தன. இந்த வர்த்தக நாமங்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பை இலங்கை தற்போது இழந்து வருவதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
