இலங்கை ரூபாய் மதிப்பு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து (தேய்வடைந்து) வருமாயின், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள், அத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, இலங்கை மத்திய வங்கி (CBSL) சந்தையிலிருந்து டொலர்களைக் கொள்வனவு செய்கின்றமை மற்றும் நிதித்துறைக் கட்டமைப்பில் ரூபாவின் திரவத்தன்மை (Liquidity) அதிகமாகக் காணப்படுகின்றமை ஆகிய காரணங்களால் அமெரிக்க டொலருக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவே இலங்கை ரூபா பலவீனமடைவதற்குக் காரணியாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய ரீதியில் நிலவும் பூகோள அரசியல் பதற்ற நிலைமைகள் (Geopolitical tensions) காரணமாக, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத் துறையினூடான வெளிநாட்டு நாணய உள்வரவு குறைந்துள்ளதாகவும், அதேவேளை ஏற்றுமதித் துறை எதிர்கொண்டுள்ள சவால்களும் நாட்டுக்குள் டொலர் வரத்து குறைவடைவதற்குக் வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இலங்கை தனக்குத் தேவையான எரிபொருளை அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தியே இறக்குமதி செய்வதனால், ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது குறிப்பாகப் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில்: ‘‘பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் இதனால் பாதிக்கப்படலாம். ஏனெனில் எரிபொருள் டொலரிலேயே இறக்குமதி செய்யப்படுகிறது, பின்னர் அவை ரூபாவிற்கு மாற்றப்பட்டே உள்நாட்டு விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது, அதற்கு இணங்க எரிபொருள் விலைகளும் உயர்கின்றன. இவ்வாறு எரிபொருள் விலைகள் உயர்வது பணவீக்கத்திற்கு (Inflation) வழிவகுப்பதுடன், மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கச் செய்யும்.’’
இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதிக்குப் பின்னர், அமெரிக்க டொலருக்கான மிக உயர்ந்த விற்பனை வீதம் நேற்று பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, (15) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை வீதம் 331.15 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
